திறந்தவெளியில் திருக்கல்யாணம்:ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூன் 2018 01:06
அருப்புக்கோட்டை,:அருப்புக்கோட்டையில் மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் தினமலர் செய்தி எதிரொலியாக, எல்லோரும் பார்க்கும் வகையில் திறந்தவெளியில் நடந்தது. சொக்கலிங்கபுரத்தில் அறநிலையத்துறையை சேர்ந்த மீனாட்சி-சொக்கநாதர் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி பிரமோற்ஸவவிழா 14 நாட்கள் நடக்கும். கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. பதினோறாம் நாள் விழாவாக, மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு நடந்தது. கடந்த 40 ஆண்டுகளாக திருக்கல்யாணம் கோயில் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் நடக்கும். பக்தர்கள் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைவர். இதுகுறித்து, ஒவ்வொரு ஆண்டும் திறந்தவெளியில், அனைவரும் பார்க்கும் வகையில் திருக் கல்யாணம் நடத்த வேண்டும் என தினமலரில் தொடர்ந்து செய்தி வெளியானது. இந்த முறை திருக்கல்யாணம் கோயில் முன் திறந்தவெளியில், பந்தல் அமைத்து அனைவரும் பார்க்கும் வகையில் ஏற்பாடுகளை நிர்வாகத்தினர் செய்தனர். திருக்கல்யாணத்தை ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர். ஆண்டுதோறும் இதுபோல் நடத்தவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். நேற்று மாலை 6:00 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு, ரதவீதிகள் வழியாக நிலையம் சென்றது. தேரில் சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.