பதிவு செய்த நாள்
28
ஜூன்
2018
11:06
புதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில், மாங்கனி திருவிழாவையொட்டி, காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனிகள் வைத்து பூஜைசெய்யப்பட்டது. அறுபத்து மூன்று நாயன்மார்களில், புனிதவதியார் என்ற காரைக்கால் அம்மையாரும் ஒருவர். இவர் சிவபெருமானிடம் கொண்ட தீவிர பக்தி மற்றும் அவரது வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில், புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில், சிறுத்தொண்ட நாயனார் திருத்தொண்டு சபை சார்பில், ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா நடந்து வருகிறது. இவ்வகையில் 16ம் ஆண்டு மாங்கனிதிருவிழா நேற்று நடந்தது. காலை 9:00 மணிக்கு துவங்கி, மதியம் 12:00 மணி வரை வேதபுரீஸ்வரர், திரிபுரசுந்தரி மற்றும் காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அபிஷோகம் நடந்தது. தொடர்ந்து, காரைக்கால் அம்மையார், மாங்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி, ஆலய உள் பிரகார புறப்பாடு நடந்தது. அப்போது, அம்மையாருக்கு மாங்கனிகள் வைத்து படையல் செய்து, பூஜை நடந்தது. ஏராளனமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.