பதிவு செய்த நாள்
29
ஜூன்
2018
11:06
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும், உலகளந்த பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள, 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, கார் வண்ணப்பெருமாள் சன்னதி மண்டபம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் உள்ள, உலகளந்தப் பெருமாள் கோவில் மூலவர், பிரமாண்ட தோற்றத்தில், நின்ற கோலத்தில் காட்சிஅளித்து வருகிறார். அதன் அருகில் ஊரகத்தான் சன்னதி உள்ளது.
கொடி மரம்: மற்ற இரு சன்னதிகளான நீரகத்தான், காரகத்தான், கோவில் இரு புறங்களிலும், கார் வண்ணப் பெருமாள் சன்னதி கொடி மரம் அருகிலும் அமைந்துள்ளன. இதில், கார்வண்ணப்பெருமாள் சன்னதியின் முன் மண்டபம், மர உத்திரம் சிதிலம் அடைந்து விழும் நிலையில், கடந்த ஒரு ஆண்டாக உள்ளது. மண்டப பாதுகாப்பிற்காக, மரக்கட்டையால் முட்டு கொடுத்துள்ளனர். இதனால் பக்தர்கள், கார்வண்ணப் பெருமாளை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. பலத்த மழை பெய்தால், மண்டபம் பழுதுஅடைந்து இடித்து விழும். அதற்குள் சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் விரும்புகின்றனர்.
பரிந்துரை: இது குறித்து, கோவில் செயல் அலுவலர், குமரன் கூறுகையில், ‘‘மண்டபம் சேதம் அடைந்தது பற்றி எங்கள் துறைக்கு தெரிவித்து விட்டோம். மண்டல கமிட்டியிடம்
பரிந்துரை செய்யப்பட்டது. ‘‘ஆணையர் கவனத்திற்கு கொண்டு சென்று, சீரமைக்க அவர் ஒப்புதல் அளித்ததும், திட்ட மதிப்பீடு அனுப்பப்படும். அதன் பின் நிதி ஒதுக்கி, திருப்பணி நடக்கும். விரைவில் ஆய்வு செய்து அதற்கான வேலை துவங்க இருக்கிறது,’’ என்றார்.