பதிவு செய்த நாள்
29
ஜூன்
2018
11:06
வில்லியனுார்: வில்லியனுார் தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் தேர் திருவிழாவை, முதல்வர் நாராயணசாமி வடம் பிடித்து துவக்கி வைத்தார். வில்லியனுார் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் 14ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, கடந்த 20ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 21ம் தேதி சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் வீதியுலாவும், 22ம் தேதி தவழ்ந்த கண்ணன் பல்லக்கு நிகழ்ச்சியும், மாலை ராமர் திருக்கோலம் அனுமந்த வாகன புறப்பாடும் நடந்தது. 24ம் தேதி கருட சேவையும், 25ம் தேதி யானை வாகன புறப்பாடும்நடந்தது.
பொது உற்சவமாக நேற்று காலை8:30 மணிக்குதேர் திருவிழா நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம், சுகுமாறன் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலையில், திருக்கோவிலுர் ராமானுஜ ஜீயர் சுவாமிகள், முதல்வர் நாராயணசாமி ஆகியோர்வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். விழாவில், இந்து அறநிலையத்துறை ஆணையர் தில்லைவேல், காங்., நிர்வாகிகள் கண்ண பிரான், ஏகாம்பரம் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வில்லியனுார் நான்கு மாட வீதிகள் வழியாக சென்ற தேர், காலை 10:50 மணியளவில் நிலையை அடைந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு, மேற்கு பகுதி எஸ்.பி., குணசேகரன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், கலைச்செல்வன், சண்முக சுந்தரம், ராஜசேகர வல்லட் மற்றும் 100க்கும் மேற் பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சமூக ஆர்வலர்கள், நற்பணி மன்றத்தினர் நீர் மோர் மற்றும் அன்னதானம் வழங்கினர்.வரும் 1ம் தேதி ஊஞ்சல் உற்சவமும், 2ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி ராமதாஸ் தலைமையில் பிரம்மோற்சவ உபயதாரர் கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.