பதிவு செய்த நாள்
23
ஜன
2012
11:01
திருவனந்தபுரம்:"பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி, பிப்ரவரி 17ம் தேதி துவங்கும் என, சுப்ரீம் கோர்ட் நியமித்த மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் வேலாயுதன் நாயர் தெரிவித்துள்ளார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் பாதாள அறைகளில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொக்கிஷங்கள், பல நூற்றாண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றை மதிப்பீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மதிப்பீடு பணிக்காக, வேலாயுதன் நாயர் தலைமையில், ஐந்து பேர் கொண்ட குழுவையும் நியமித்துள்ளது. இதற்கு முன், இக்குழுவின் தலைவராக, தேசிய அருங்காட்சியக துணை வேந்தர் டாக்டர் ஆனந்தபோஸ் இருந்தார்.அவரது பதவிக் காலம் முடிந்து ஓய்வு பெற்றதை அடுத்து, மதிப்பீட்டுக் குழுவின் புதிய தலைவராக, டாக்டர் வேலாயுதன் நாயரை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.இக்குழுவின் முதல் கூட்டம், நேற்று மதியம் கோவில் அருகே, ரங்கவிலாசம் அரண்மனையில் நடந்தது. கூட்டத்தில், திருவிதாங்கூர் மன்னர் குடும்ப பிரதிநிதி, கோவில் அலுவலர் அரிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின், மதிப்பீட்டுக் குழு தலைவர் வேலாயுதன் நாயர் கூறியதாவது:பாதாள அறை பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணிகளை, விரைந்து முடிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 17 அல்லது 18ம் தேதி மதிப்பீட்டுப் பணி துவங்கும். தொடர்ந்து பணிகளை நடத்தி, திட்டமிட்ட நாளுக்கு முன்பாகவே முடிக்கப் படும்.அதற்கு முன்பாக, மூன்று நாட்கள் ஒத்திகைப் பணிகள் நடைபெறும். முன்னதாக, அடுத்த மாதம் 9ம் தேதி, மீண்டும் மதிப்பீட்டுக் குழு மற்றும் கண்காணிப்புக் குழுவினரின் கூட்டம் நடத்தப்படும்.மதிப்பீட்டுப் பணிக்காக, கெல்ட்ரான் நிறுவனம் சில பொருட்களை வழங்கியுள்ளது. மேலும், பல முக்கிய கருவிகளையும், பொருட்களையும் விரைவில் வழங்கும்.இவ்வாறு வேலாயுதன் நாயர் தெரிவித்தார்.