நமக்கு ஒருவர் செய்யும் கொடுமையை எந்த அளவிற்கு மன்னிப்போம்? எந்த அளவிற்கு மன்னித்தாலும் இந்த அளவிற்கு மன்னிக்க மாட்டோம். அந்த அளவிற்கு மன்னித்தவர் நபிகள் நாயகம். ஒருமுறை நாயகத்தின் மகள் ஜைனப், மெக்காவில் இருந்து மதீனாவிற்கு புறப்பட்டார். ஒரு ஒட்டகத்தில் ஏறி அமர முயன்றார். அப்போது, நாயகத்தை வெறுக்கும் ஹப்பார் என்பவன் ஓடி வந்து, ஒரு ஈட்டியால் ஜைனப்பை குத்தினான். கர்ப்பிணியாக இருந்த ஜைனப் நிலை குலைந்தார். கர்ப்பம் கலைந்தது கண்டு கதறியபடி ஜைனப் அந்த இடத்திலேயே இறந்தார். இதைக் கண்டு கண் கலங்கிய நாயகம், ஹப்பாரை ஒரு வார்த்தை கூட திட்டவில்லை. “இறைவன் உனக்கு நல்லறிவைக் கொடுக்கட்டும்” என்று மட்டும் சொன்னார். இந்த சம்பவம் நடந்து சில ஆண்டுக்கு பின் தன்னை சந்திக்க வந்த ஹப்பாரிடம் நாயகம் கேட்டார், “என் மகளைக் கொன்றவன் தானே நீ?” என்றார். “ஆம்” என்று தலை குனிந்தபடி, “நான் தங்களுக்கு எதிராக இருந்த காலத்தில் அறியாமல் செய்த தவறு அது. கருணைக் கடலான தங்களைப் பற்றி இப்போது தான் புரிந்து கொண்டேன்” என்று வருந்தினான் ஹப்பார். “இறைவன் உன்னை மன்னிப்பார்” என்றார் நாயகம். அவரின் கருணைக் கடலில் இது ஒரு துளியே!