உங்களுக்கு எவ்வளவு பெரிய கொடுமை செய்திருந்தாலும் அவர்களை மன்னிக்கும் பக்குவம் வந்துவிட்டால், உலகில் அமைதிக்கு குறைவிருக்காது. பழி வாங்கும் போக்கு அறவே கூடாது என்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கை மூலம் தெரிந்து கொள்ள வேண்டியதாகும். ஒரு முறை நபிகள்நாயகம்(ஸல்) அவர்களின் திருமகளார் ஜைனப், மக்காவிலிருந்து மதீனாவிற்கு புறப்பட்டார். அப்போது அவர் கர்ப்பமாக இருந்தார். ஒரு ஒட்டகத்தில் ஏறி அமரமுயன்ற போது, நாயகத்தின் கொள்கையைப் பிடிக்காத ஹப்பார் என்பவன் கையில் ஒரு ஈட்டியுடன் ஓடி வந்தான். ஜைனப்பை குத்தினான். கீழே சாய்ந்த ஜைனப்பின் கர்ப்பம் கலைந்தது. சில நாட்களில் அவர் இறந்தும் போனார். இந்த சம்பவம் நடந்து சில ஆண்டுகளுக்கு பிறகு நபிகள் நாயகத்தைச் சந்திக்க ஹப்பார் வந்தான். நாயகம் அவர்கள் அவனிடம், “ என் மகளைக் கொன்ற ஹப்பார் தானே நீர்,” எனக் கேட்டார்கள். ‘ஆம்’ என ஒப்புக் கொண்ட ஹப்பார், நாயகத்திடம், “நான் தங்களுக்கு எதிராக இருந்த காலத்தில் அறியாமல் செய்த தவறு அது. கருணைக் கடலான உங்களை இப்போது தான் புரிந்து கொண்டேன்,” என வருத்தத்துடன் சொன்னான். “அந்த ஆண்டவன் உன்னை மன்னிப்பார்,” என்றார்கள் அண்ணலார். சொந்த மகளைக் கொன்றவர்க்கும் கருணை காட்டிய மனமுள்ளவர் நாயகம்(ஸல்) அவர்கள். இந்தப் பண்பு எத்தனை பேருக்கு வரும்? நாயகம்(ஸல்) அவர்களைப் போலவே பழிவாங்கும் போக்கை கைவிட்டு, எதிரிகளையும் மன்னிக்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.