பதிவு செய்த நாள்
07
ஜூலை
2018
11:07
காங்கேயம் : சிவன்மலை கோவில், ஆண்டவர் உத்தரவு பெட்டியில், செம்பு அம்பு வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவு பெட்டி உள்ளது. இதில் வைத்து பூஜிக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அல்லது நடக்கப்போவதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறியாக அமையும் என்பது, பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.
கடந்த ஏப்., 10 முதல், அருகம்புல், கீழாநெல்லி வேர், மிளகு வைத்து பூஜையானது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்காலை சேர்ந்த கென்னடி, 51, என்பவர் கனவில், செம்பு அம்பு வைக்க உத்தரவானது. நேற்று முதல், இப்பூஜை பொருள் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து சிவாச்சாரியார் ஒருவர் கூறியதாவது: பக்தர்களின் கனவில், சிவன்மலை ஆண்டவர் சொல்லும் பொருள், உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்படுவது, வழக்கமாக உள்ளது. இதில் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது செம்பு அம்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் தீமை அகன்று, நன்மை பெருகும். இவ்வாறு அவர் கூறினார்.