பதிவு செய்த நாள்
10
ஜூலை
2018
10:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பலவீனமாக உள்ள இரண்டாம் பிரகாரத்தை சென்னை ஐ.ஐ.டி., குழுவினர் ஆய்வு செய்தனர். ராமேஸ்வரம் கோயில் 12ம் நுாற்றாண்டில் உருவானது. 15 முதல் 18ம் நுாற்றாண்டு வரை கோயிலில் ராஜகோபுரம், பிரகாரங்கள், சுவர்கள் கட்டடப்பட்டன. 16ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட இரண்டாம் பிரகார (வடக்கு பகுதி) துாண்கள், மேற்கூரைகள் உப்புக்காற்றில் அரிக்கப்பட்டு சேதமடைந்தன. பலத்த காற்று வீசும் போது ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பிரகாரத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க அறநிலையத்துறையினர் முடிவு செய்தனர். இதன்படி 2017ல் சென்னை ஐ.ஐ.டி., கட்டட பிரிவு வல்லுனர்கள் ஆய்வு செய்தனர். இரண்டாம் கட்டமாக நேற்று ஐ.ஐ.டி., கட்டட பிரிவு திaட்ட அலுவலர்கள் கற்பகம், சுதாகர், பொறியாளர்கள் மதன், ஐஸ்வர்யா ஆய்வு செய்தனர். பிரகார துாண்கள், மேற்தளத்தின் உறுதி, பலவீனம் குறித்து ‘அல்ட்ரா சோனிக் சிஸ்டம்’ கருவி மூலம் ஆய்வு செய்தனர். பின் இணை ஆணையர் மங்கையர்கரசி, உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஷ்கார் செல்லத்துடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வு இரு நாட்கள் நடக்கும். ஆய்வு அறிக்கையை அறநிலையத்துறை ஆணையரிடம் வழங்குவர். இதையடுத்து இரண்டாம் பிரகாரத்தை கட்டுவதா, பழமை மாறாமல் புதுப்பிப்பதா என முடிவு செய்யப்படும்.