பதிவு செய்த நாள்
24
ஜன
2012
11:01
பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில், புயலின் போது துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு, மீண்டும் வழங்கப்படாததால், கோவில், இருளில் மூழ்கியுள்ளது.கல்பாக்கம் அடுத்த பரமேஸ்வரமங்கலம் கிராமத்தில், கனகாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவில், பாலாற்றின் மையத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ளது. சுற்றுப்புற கிராம மக்கள் மட்டுமின்றி, வெளியூர்களிலிருந்தும், பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு, ஆற்றங்கரையில் உள்ள மின் கம்பத்திலிருந்து, ஆற்றை தாண்டி கோவிலுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 30ம் தேதி, "தானே புயலில், மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், கோவில் இருளில் மூழ்கியது. அதன் பின், மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால், இரவில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.இது குறித்து, கூவத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வஜ்ஜிரவேல் கூறும்போது," புதிய மின் கம்பம் அமைத்து, கோவிலுக்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.