பதிவு செய்த நாள்
25
ஜன
2012
11:01
ஈரோடு: ஈரோடு, பவானி ரோட்டில், பெருமாள்மலையில் மீதுள்ள மங்களகிரி பெருமாள் கோவில், முட்புதர்கள் நிறைந்த வனமாக மாறியுள்ளது. 80 ஆண்டாக கும்பாபிஷேகம் காணாததால், பக்தர்கள் விரக்தியில் உள்ளனர். தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள பல்வேறு கோவில்கள், பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் காணாமல் உள்ளன. ஈரோடு மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கீழ், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. பவானி செல்லும் சாலையில் பெருமாள் மலையில் மீதுள்ள, 1,500 ஆண்டுகள் பழமையான, மங்களகிரி பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தமானது. ஆண்டுதோறும் புரட்டாசி, சித்திரை மாதத்தில், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலில் குவிவர். இக்கோவில் மூலம் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய், அரசுக்கு வருவாய் கிடைத்து வருகிறது. கோவில் படிக்கட்டிலும், கோவிலின் முன் பகுதியிலும், முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், கோவிலுக்கு வரும் மர்ம நபர்கள், கோவிலிலேயே மது அருந்தி கும்மாளமிட்டு வருவதால், பக்தர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும், 80 ஆண்டுக்கும் மேலாக கும்பாபிஷேகம் காணாமல் உள்ளது. பக்தர்கள் கூறுகையில், ""பொதுவாக, 12 ஆண்டுக்கு ஒருமுறை கோவில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என்பது ஐதீகம். ஆனால், 80 ஆண்டுக்கும் மேலாக மங்களகிரி பெருமாள் கோவிலில், கும்பாபிஷேகம் நடக்கவில்லை. கோவிலின் படிக்கட்டிலும், கோவிலின் முன் பகுதியிலும், முட்புதர்கள் வளர்ந்திருப்பதால், மங்களகிரி பெருமாள் கோவிலின் அழகே பறி போய்விட்டது. மாலை நேரங்களில் மலையேறும் சில மர்ம நபர்கள், பக்தர்கள் ஓய்வறையில் மது அருந்தி, பக்தர்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர். மாலை நேரத்தில் பெண்கள் கோவிலுக்கு வருவதேயில்லை. பழுதடைந்த கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்து வருகிறார். அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோவிலிலும் கும்பாபிஷேகம் நடக்க முதல்வர் உத்தரவிட வேண்டும், என்றனர். கோவில் செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், ""அறங்காவலர் குழு நியமிக்கப்பட்ட பின், கமிட்டி அமைத்து, மங்களகிரி பெருமாள் கோவிலுக்கான திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். என்றார்.