பதிவு செய்த நாள்
20
ஜூலை
2018
01:07
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் அருகில் நடைமேடை சுவர் உடைத்து புதுப்பிக்க உள்ளதால், அரசுக்கு ரூபாய் 70 லட்சம் வீணாகியது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக 10 ஆண்டுக்கு முன்பு ஓலைக்குடா கடற்கரையில் ரூபாய் 20 லட்சத்தில் பூங்காவும், 8 ஆண்டுக்கு முன்பு அக்னி தீர்த்தம் அருகில் நகராட்சி சார்பில் ரூபாய் 50 லட்சத்தில் தடுப்பு சுவருடன் நடைமேடை அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் பூங்கா, நடைமேடையை பராமரித்த நகராட்சி நிர்வாகம், காலபோக்கில் கண்டு கொள்ளாதால் சமூக விரோதிகளால் பூங்கா இருக்கும் இடம் தெரியாமல் போனது. மேலும் நடைமேடையில் இருந்த சோலார் பேட்டரி, இரும்பு தடுப்பு கைபிடிகள் திருடு போனது. இந்நிலையில் மத்திய அரசின் அம்ரூத் சிட்டி திட்டத்தில் ரூபாய் 2.40 கோடி செலவில் மீனவர்கள் எதிர்ப்புக்கு இடையே மீண்டும் ஓலைக்குடாவில் அதே இடத்தில் புதிய பூங்காவும், அக்னி தீர்த்த நடைமேடை புதுப்பிக்கவும் உள்ளனர். இதற்காக நகராட்சி நிர்வாகம் நடைமேடை தடுப்பு சுவரை இடித்து தள்ளி புதுப்பிக்கும் பணியை துவக்கியதால், அரசுக்கு ரூபாய் 70 லட்சம் வீணாகியது.
பராமரிப்பு யார் : சமூக ஆர்வலர்களிடம் கருத்து கேட்காமல் புதிய பூங்கா, நடைமேடை புதுப்பித்த பிறகு இதனை பராமரித்து, பாதுகாப்பது யார் என கேள்வி எழுந்துள்ளது. இதனால் புதிய பூங்காவும், நடைமேடையும் மீண்டும் சின்னபின்னமாகும் அவலம் உள்ளதால் நகராட்சி ஆணையர், காவல்துறை, சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு அமைத்து பராமரித்து, பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் அம்ரூத் சிட்டி நிதியும் வீணாகும் என மக்கள் தெரிவித்தனர். நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமார் கூறுகையில் :ரூபாய் 2.40 கோடியில் அக்னி தீர்த்த கடற்கரை நடைமேடை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. விரைவில் ஓலைக்குடாவில் பூங்கா பணி துவங்கும். இதனை நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து பராமரிக்கும் என்றார்.