திருமங்கலம் கோயில்கள் இன்று முதல் அடைப்பு; கோயில் பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2018 12:07
திருமங்கலம் : திருமங்கலத்தில் ஆக்கிரமிப்பினை அகற்ற சென்ற கோயில் அதிகாரிகள், பணியாளர்களை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து 9 கோயில்கள் அடைக்கப்படும் என பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திருமங்கலம் காட்டுப்பத்திரகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடம் விடத்தகுளம் ரோட்டில் உள்ளது. இந்த இடத்தை தனியார் ஆக்கிரமித்துள்ளனர். இது தொடர்பாக நடந்த வழக்கில் அறநிலையத்துறைக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. நேற்று நீதிமன்ற உத்தரவுப்படி நிர்வாக அதிகாரி சர்க்கரையம்மாள் தலைமையில் ஊழியர்கள் இடத்தை மீட்க சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக கோயில் பணியாளர்கள் திருமங்கலம் போலீசில் புகார் செய்தனர். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது குறித்து தமிழ்நாடு கோயில் பணியாளர்கள் சங்க மதுரை மண்டல செயலாளர் பூபதி கூறியது:. போலீசாரை கண்டித்து, இன்று முதல் திருமங்கலம் மீனாட்சி- சொக்கநாதர் கோயில், காட்டுப்பத்திரகாளியம்மன் கோயில், காட்டுமாரியம்மன் கோயில், செங்குளம் தாளமுத்தையா கோயில், சிவரக்கோட்டை மாரியம்மன் கோயில், குராயூர், வில்லுார் பெருமாள் கோயில் உட்பட 9 கோயில்களின் நடை சாத்தப்படும். போலீசார் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நடை திறப்போம் என்றார்.