பதிவு செய்த நாள்
28
ஜன
2012
11:01
ஆனைமலை : ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது. ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் பிப்ரவரி எட்டாம் தேதி குண்டம் திருவிழா நடைபெறுவதை ஒட்டி நேற்று காலை 6.30 மணிமுதல் மாலை 6.30 மணிவரை சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை 7.00 மணிக்கு ரமணமுதலிபுதூர் குமார் குழுவினரின் மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது. இன்று மாலை 7.00 மணிக்கு சிவகாமிசுந்தரி தியாகராஜனின் பக்தி சொற்பொழிவு நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை தக்கார் வீரபத்திரன், உதவி ஆணையர் ரமேஷ், கண்காணிப்பாளர்கள் செந்தழிழ்செல்வன், சேகர், கோவில் புலவர் லோகநாதீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.
கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை: கோவில் குண்டம் திருவிழாவுக்காக 80 அடி உயர கொடிமரம் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது, எதிர்பாராதவிதமாக கொடிகம்பத்தின் உச்சியில் 10 அடி அளவிற்கு முறிந்தது. இதைக்கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், "கொடிமர மூங்கிலின் நுனியில் சிறிய ஓட்டைகள் இருந்ததால், நிலை நிறுத்தும் போது எதிர்பாராத விதமாக முறிந்தது. கொடியேற்றத்தன்று இரவு, கோவில் நடைசாத்துவதற்கு முன்பாக கொடி மரத்தை கோபுரம் அருகில் சாய்த்து உடைப்பு ஏற்பட்ட இடத்தில் இணைப்பு வைத்து சரி செய்துள்ளோம். இதற்காக அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது என்றனர்.