பதிவு செய்த நாள்
02
ஆக
2018
12:08
புதுடில்லி: சபரிமலை அய்யப்பன் கோவிலில், பெண்களை அனுமதிக்க வேண்டும் எனக்கூறி தாக்கல் செய்த வழக்கில், தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.கேரளாவில், பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் சென்று வழிபட, ௧௦ – ௫௦ வயதுக்குட்பட்ட பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பின் சார்பில், உச்ச நீதிமன்றத்தில், இது தொடர்பாக, பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘சபரிமலைக்கு செல்ல, பெண்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஒரு மாதமாக விசாரித்து வந்தது. அப்போது, ‘சபரிமலைக்கு செல்வதற்கு, பெண்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக் கூடாது என்பதே எங்கள் நிலை’ என, கேரளாவை ஆளும், இடது ஜனநாயக முன்னணி அரசு தெரிவித்தது. ஆனால், ‘பெண்களை அனுமதிக்க முடியாது’ என, சபரிமலை கோவிலை நிர்வகிக்கும், தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தீர்ப்பை ஒத்திவைப்பதாக, நீதிபதிகள் நேற்று அறிவித்தனர்.