பதிவு செய்த நாள்
30
ஜன
2012
12:01
கடையநல்லூர் : "ஓம் முருகா, திருமலைக்குமரா பக்தி கோஷம் முழங்கிட பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அன்னக்கொடியேற்றும் விழா நேற்று இரவு நடந்தது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முருக பக்தர்களால் 7வது படைவீடாக வழிபட்டு வரும் திருமலைக்குமாரசுவாமி கோயிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா நேற்று அன்னக் கொடியேற்றத்துடன் துவங்கியது. மலைக்கோயிலில் காலை 5.20 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து மலைக்கோயிலில் இருந்து பண்பொழி நகருக்கு திருமலைக்குமரனை அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4 மணிக்கு ஐந்துபுளி மண்டபத்தில் சுவாமி அழைப்பும், அதனை தொடர்ந்து மண்டபத்தில் இருந்து வெள்ளிமயில் வாகனத்தில் சுவாமி அழைப்பும் நடந்தது. இரவு 7 மணிக்கு பண்பொழி கீழரத வீதியில் அன்னக்கொடியேற்றப்பட்டது. கொடியேற்றத்தின் போது பக்தர்கள் "ஓம் முருகா, திருமலைக்குமரா என்ற பக்திகோஷங்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர். வாணவேடிக்கைகள் முழங்கிட, பக்தர்களின் கரகோஷத்துடன் விழா நடந்தது. தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் சிறப்பு பூஜைகள், சுவாமி திருவீதியுலா, கலைநிகழ்ச்சிகள், சமய சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் சிறப்பு பெற்ற முருகன் - சண்முகர் எதிர்சேவை காட்சி வரும் பிப்.4ம் தேதி நடக்கிறது. தேரோட்டம் 6ம் தேதி நடக்கிறது. இந்தாண்டு தைப்பூச திருவிழா செவ்வாய் கிழமை வருவதால் முருகப்பெருமானுக்கு விசேஷ நாளாக பக்தர்களால் வழிபட்டு வரும் நாளாக கருதப்படுவதால் இந்த ஆண்டு தைப்பூசம் மிக வெகு விமரிசையாக பக்தர்கள் மத்தியில் காணப்பட்டு வருகிறது. நேற்று மாலை நடந்த அன்னக்கொடி ஏற்று விழாவில் கோயில் உதவி ஆணையர் ராசாலிசுமதா, பண்பொழி டவுன் பஞ்.,தலைவர் சங்கரசுப்பிரமணியன், அதிமுக செயலாளர் பரமசிவன், கரிசல்குடியிருப்பு முத்தழகு மற்றும் மண்டகப்படிதாரர்கள், அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் உட்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.