பதிவு செய்த நாள்
07
ஆக
2018
11:08
வருஷநாடு: ஆடி அமாவாசையை ஒட்டி சதுரகிரி கோயிலுக்கு உப்புத்துறை வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து யானைகஜம் மலைப்பகுதியில் பாஸ்கரன் எஸ்.பி., மேகமலை வன உயிரின காப்பாளர் கலாநிதி ஆய்வு செய்தனர். சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ஆக.11ல் நடக்கிறது. அதையொட்டி தேனி, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக வருஷநாடு அருகே உப்புத்துறை மலைப்பகுதி வழியாக 30 கி.மீ., நடந்து செல்வர். இங்கு மழை இல்லாததால் வனப் பகுதிகளில் நீரூற்று இல்லை. இதனால் வறண்டு உள்ளது.
யானை ,கரடி, கடமான், புள்ளிமான் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகமாக உள்ளதால் அவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் பக்தர்களுக்கு அறிவுறுத்துவது, மேலும் தீ பற்றக் கூடிய பொருட்கள் பறிமுதல் செய்தல், பக்தர்களுக்கு வனத்துறை, போலீசார் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்துதல், சுகாதாரத்துறை சார்பில் முதலுதவி சிகிச்சை வசதி, பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதி ஏற்படுத்து குறித்து, தேனி பாஸ்கரன் எஸ்.பி., மேகமலை வன உயிரின காப்பாளர் கலாநிதி ஆகியோர் யானை கஜம் மலைப்பகுதியில் ஆய்வு செய்தனர். வன உதவி பாதுகாவலர் குகனஷே், ஆண்டிபட்டி டி.எஸ்.பி, (பொறுப்பு)கணபதி, வருஷநாடு ரேஞ்சர் இக்பால், அதிகாரிகள் உடனிருந்தனர். எஸ்.பி., கூறுகையில், ‘‘கோயிலுக்கு செல்லக் கூடிய பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதி செய்வதற்காக 100க்கு மேற்பட்ட போலீசார் நியமிக்கப்பட்டு 15 இடங்களில் பணியில் ஈடுபடுவர்,’’என்றார்.
வன உயிரின காப்பாளர் கூறுகையில், ‘‘வனவளத்தை பாதுகாப்பது குறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மாலை 6:00 மணிக்கு மேல் கோயிலுக்கு செல்ல தடைவிதிப்பது குறித்து ஆய்வில் ஆலோசிக்கப்பட்டது. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வனத்துறை மூலமாக செய்யப்பட்டு வருகிறது, ’’என்றார்.