கள்ளக்குறிச்சி: தண்டலை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி நேற்று 108 பால்குட ஊர்வலம் நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் 15ம் ஆண்டு ஆடித்திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, நேற்று காலை 10:00 மணியளவில் கள்ளக்குறிச்சி கோமுகி நதிக்கரையிலிருந்து சக்தி அழைத்தல், 108 பால்குடம் மற்றும் பூங்கரகம் ஊர்வலம் நடந்தது. கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை, தியாகதுருகம் சாலை வழியாக ஏராளமான பக்தர்கள் பலர் பால்குடம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக தண்டலை சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு பால் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.