பதிவு செய்த நாள்
11
ஆக
2018
03:08
சென்னை, கம்பராமாயணம், ஒவ்வொரு முறை படிக்கும் போதும், புதுயைான கருத்துக்களை வழங்கும் புதையல் போன்றது, என, நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசினார். சென்னை கம்பன் கழகத்தின், 44ம் ஆண்டு விழா, சென்னையில் நேற்று நடந்தது. அதில், பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா, காங்., மூத்த தலைவர் குமரி அனந்தன், பேராசிரியர் ஜெயதேவன், வானொலி நிகழ்ச்சி தயாரிப்பாளர், ஞானபிரகாசம், சுயசரிதை எழுத்தாளர் ராணி மைந்தன் உள்ளிட்ட, 19 பேருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. விருதுகளை வழங்கி, ஐதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் பேசியதாவது: கம்பராமாயணத்தில், கம்பன் செய்யாத புதுமையை, சென்னை கம்பன் கழகம் செய்துள்ளது. ராமாயணத்தில், இரண்டு தலைமுறையினரைப் பற்றிய கதை உள்ளது. சென்னை கம்பன் கழகத்தில், மூன்று தலைமுறையினர் பெருமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நான், 1977ல், மாணவனாக இருந்த போது, கம்பன் கழகம் நடத்திய, கம்பனும் திருவள்ளுவனும் என்ற தலைப்பில் நடந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்று, முதல் பரிசாக, 250 ரூபாய் பெற்றேன். வழக்கறிஞரான பின், இதே கம்பன் கழகத்தில், பேச்சாளரானேன். தற்போது, தலைமை ஏற்கிறேன். ராமாயணத்தில் ராமன், ஒரு அவதாரம் எடுத்தான். நான் இங்கு மூன்று அவதாரங்கள் எடுத்து உள்ளேன். கடந்த, 20ம் நுாற்றாண்டில் பேசப்பட்ட, தலைமுறை உரிமைகளைப் பற்றி கம்பன், வருணன் கதை வழியாக உணர்த்துகிறான். இவன், பூமியில் உள்ள வளங்களை, ஒரே தலைமுறையில் பறிக்கும் பாவத்துக்கு உரியவன் எனக் கூறுகிறான். பல்லுயிர் பரவல் பற்றி, நலன் கதையில், ஒரே அம்பில், இந்த கடலை நீ, கட்டியாக்கி விடுவாய்; ஆனால், அதில் உள்ள பல உயிர்கள், அத்துடன் மடியும். அதனால் கிடைக்கும் வெற்றியில் என்ன பயன் என, கேட்கிறான். வால்மீகி ராமாயணத்தில் இல்லாத பகுதியாக, கருடன் துதி என்னும் பகுதியை, கம்பன் படைத்து, அதில், மனித வாழ்வின் தத்துவங்களை உச்சமாக்குகிறான்.
கல்வி சிறந்த தமிழ்நாடு, இது கம்பன் பிறந்த தமிழ்நாடு; யாமரிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவனைப் போல் யாங்கனுமே கண்டதில்லை என, பல இடங்களில், கம்பனை உச்சத்தில் வைக்கிறான், பாரதி. அதற்கு காரணம், ஒவ்வொரு முறை படிக்கும் போதும், கம்பராமாயணம் புதிய புதிய கருத்துக்களை உணர்த்துவது தான். இவ்வாறு அவர் பேசினார். கம்பராமாயணத்தில் உணர்ச்சி மேலாண்மை என்ற தலைப்பில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி இறையன்பு பேசினார். தொடர்ந்து, திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய, உடன் பிறந்த தம்பியரும்; உபன் பிறவாத் தம்பியரும் என்ற நுால் மற்றும் வழி வழி வள்ளுவம், மாக்கதையில் மனக்காயங்கள் எனும், இரண்டு குறுந்தகடுகள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில், சென்னை கம்பன் கழக தலைவர், ஆர்.எம்.வீரப்பன், செயலர் இலக்கியவீதி இனியவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.