இயற்கை வழிபாட்டு முறையில் பாம்பு புற்றினை வழிபடுவது பழங்காலம் முதலே இருந்து வருகிறது. பாம்பினை அம்பிகையின் அம்சமாகக் கருதி வணங்குவர். அம்மன் கோயில்களில் பாம்பு காவல் புரிவதாகவும், அம்பிகையின் குடையாக இருப்பதாகவும் கூறுவர். மாரியம்மன் கோயில்களில் உள்ள புற்றினை ’புற்று மாரியம்மன்’ என்று சொல்வது வழக்கம். ஆடிச்செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வழிபட்டு புற்று மண்ணையே பிரசாதமாக நெற்றியில் பூசிக் கொள்வர். ஆடிமாத வளர்பிறை சதுர்த்தியான ’நாகசதுர்த்தி’யில் புற்றுக்கு பால் விடுதல், பொங்கல் வைத்தல் ஆகிய வழிபாட்டை மேற்கொண்டால் நாகதோஷம், சர்ப்பதோஷம் நீங்கி நன்மை உண்டாகும்.