பதிவு செய்த நாள்
13
ஆக
2018
12:08
கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரியில், முத்துமாரியம்மன் கோவில் ஆடி திருவிழா, நேற்று கோலாகலமாக நடைபெற்றது. கூடுவாஞ்சேரி, ரயில்வே காலனி, என்.ஜி.ஓ., காலனியில், புகழ்பெற்ற மாமர சுயம்பு சித்தி விநாயகர், லலிதாம்பிகை சமேத மாமரத்து ஈஸ்வரர், முத்துமாரியம்மனுக்கு தனித்தனி கோவில்கள் உள்ளன. முத்துமாரியம்மன் கோவிலில், இந்த ஆண்டு ஆடி திருவிழாவையொட்டி, முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 108 பால்குட அபிஷேகமும், நேற்று நடைபெற்றது. பகல், 1:00 மணிக்கு, அம்மனுக்கு கூழ்வார்த்தல் நடைபெற்றது. பின், சந்தனகாப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளினார். கூடுவாஞ்சேரியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். திருவடிப்பூர திருவிளக்கு பூஜை, இன்று நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் சீனுவாசன், தலைமை அர்ச்சகர் முத்துகுமார் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.