பதிவு செய்த நாள்
14
ஆக
2018
02:08
குளித்தலை: ஆடி 28 முன்னிட்டு, பக்தர்கள் காவிரி ஆற்றில் குலதெய்வ சுவாமி சிலைகளை வைத்து பூஜித்தனர். குளித்தலை, கடம்பர்கோவில் காவிரி ஆற்றில், அய்யர்மலை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, பொது கோவில், மற்றும் கோவில் குடிப்பாட்டுகாரர்கள், பொது மக்கள் சேர்ந்து கோவில்களில் உள்ள சிலை, வேல், கரகம், அரிவாள்களை எடுத்து வந்து அலங்காரம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் மேட்டு மகாதானபுரம் சேர்ந்த பெரியகாண்டியம்மன் கோவில் பங்காளிகள், கடந்த, 11ல் மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். நேற்று முன்தினம் மாலை காவிரி ஆற்றில் கரகம் பாலித்து, கோவில் வந்து அபிஷேகம் செய்தனர். நேற்று காலை, பச்சை மண்பானையில் தண்ணீர் எடுத்து வந்து கோவில் முன் அரண்மனை பொங்கல் வைத்தனர். தொடர்ந்து, பச்சை பூஜை நடந்தது. முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில், கரகம் காவிரி ஆற்றில் விடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மேட்டுமகாதானபுரம் பகுதி பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.