கன்னியாகுமரி : சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி பதியில் தைத்திருவிழா தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது. சாமிதோப்பு ஐயா வைகுண்டசாமி தலைமைப்பதியில் தை திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் தினமும் சிறப்பு பணிவிடை, வாகன பவனி, அன்னதானம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. 11ம் நாள் விழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. காலையில் சிறப்பு பணிவிடை நடந்தது. பகல் 12 மணிக்கு அய்யா பல்லக்கு வாகனத்தில் பவனியாக வந்து தேருக்கு எழுந்தருளினார். வண்ண தோரணங்களாலும் மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட தேரை ஆயிரக்கணக்கான அய்யா வழி பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் தேர் ஆடி அசைந்து வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. வடக்கு வாசலுக்கு தேர் வந்தபோது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சுருள் வைத்து வழிபட்டனர். மாலை 5 மணியளவில் தேர் நிலைக்கு வந்தது. தை திருவிழாவை காண குமரி மாவட்டம் மட்டுமன்றி நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இரவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதானம் நடந்தது. திருவிழா ஏற்பாடுகளை பாலபிரஜாதிபதி அடிகளார், பால ஜனாதிபதி, பால லோகாதிபதி, ராஜவேல், பையன், கிருஷ்ணராஜ், பையன் நேமி, பையன் கிருஷ்ணநாமமணி, பையன் செல்ல வடிவு ஆகியோர் செய்திருந்தனர்.