திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி மாணவர்கள் கல்வெட்டு படியெடுத்த போது கி.பி. 7ம் நூற்றாண்டிலேயே "திருப்புத்தூர் என்ற பெயர் வழக்கத்தில் இருந்தது தெரியவந்தது.
இக்கல்லூரியின் வரலாற்று துறை மாணவர்களுக்கு குறுகிய கால கால்வெட்டுப்பயிற்சி அளிக்கப்பட்டது. திருச்சி மண்டல அருங்காட்சிய ஓய்வு பெற்ற துணை இயக்குனர் சந்திரவாணன் பயிற்சி அளித்தார்.
பண்டைய தமிழி, பிராமி, வட்டெழுத்துக்களை வாசிப்பது, எழுதுவது குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தையது தமிழி, 1600 ஆண்டுகளுக்கு முந்தையது வட்டெழுத்துக்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வடமொழிச் சொல்கலப்புடன் கூடியது கிரந்தம் எழுத்துக்கள் என்பது விளக்கப்பட்டது.
பயிற்சிக்குப் பின் மாணவர்கள் அரூர் ராஜேந்திரன் திருத்தளிநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டுக்களை வாசிக்க "படியெடுக்கும் முறைகுறித்து செயல் விளக்கம் அளித்தார். அப்போது மூலவர் சன்னதிக்கு பின்புறம் கொன்றை மரம் அருகில் உள்ள கல்வெட்டில் "திருப்புத்தூர் என்ற பெயர் இருந்தது தெரிய வந்தது. இதனால் கி.பி. 7ம் நூற்றாண்டிலிருந்தே இந்த நகர் "திருப்புத்தூர் என்ற அழைக்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.முதல்வர் சூசைமாணிக்கம் தலைமை வகித்தார். துணை முதல்வர் கோபிநாத், வரலாறு துறை தலைவர் பேராசிரியர் தனலெட்சுமி முன்னிலை வகித்தனர். பேராசிரியர்கள் வேல்முருகன், சஞ்சீவி, சிவச்சந்திரன், இளங்கோவன் பங்கேற்றனர். அருங்காட்சியக பணியாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.