பதிவு செய்த நாள்
22
ஆக
2018
02:08
தொழுகையை முடித்து துவாவில் அமர்ந்து விட்டார், நூர் முகம்மது. பெருநாளைக்கு முந்தைய லைலத்துல், கதிர் இரவுக்கான அலங்கார வளைவுகள் அமைக்கும் பணிகள், பள்ளியில் ஆங்காங்கே நடந்த வண்ணம் இருந்தன. ஏசி பராமரிப்பு பணிகள் நடந்து வந்ததால், பள்ளியில் அப்போது, ஏசி இயங்கவில்லை; ஆனாலும், மனதில் வீசிய குளுமை, வெளியில் வீசிய வெம்மையை தகர்த்து வீசியிருந்தது.கண்களை மூடி, இறைவனின் ஒளியை நடுநெற்றியில் கொண்டு வந்து நிறுத்தினார். உண்மையான இறை வழிபாடு என்னவென்று இவருக்கு குரான் கற்பித்த இமாம் சாகிப் சொன்னது, இன்றைக்கும் பசுமரத்து ஆணி போல் நெஞ்சில் நிற்கிறது. உண்மையான இறை வழிபாடு என்பது மொழியாலும், மனதாலும், மெய்யாலும் இறைவனை வணங்குவது. மூன்றும் ஒரு புள்ளியில் சேர்வது தான், இறைவனை வணங்கும் பூரண நிலை.ஆரம்ப நாட்களில், இது, மூன்றும் ஒன்றாய் பொருந்தாமல், நூர் முகம்மது மிகவும் சிரமப்பட்டார். வாய், இறை வசனங்களை சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மனம் வியாபார விருத்தியை பற்றி யோசித்தது; மனமும், மொழியும் யோசித்தாலும், உடம்பு தொழுகைக்கு செல்ல சோம்பல் பட்டது. ஆனால், நாளாக நாளாக எல்லாவற்றையும், ஒரு புள்ளியில் இணைத்தார்.
மொழியையும், மனதையும், உடம்பையும், இறைவனை வணங்கும் கேடயமாக்கினார். அதன்பின், அவருடைய வாழ்க்கையில் தொய்வே இல்லை.பழைய நாட்கள்காயல்பட்டினம் ஜமில் காதரின், எட்டாவது மகனாய் துவங்கியது அவரின் வாழ்க்கை.
மண்ணெண்ணெய் ஸ்டவ்வே, அத்தனை பிரசித்தி பெறாத அந்த நாளில், விறகுக்கடை தான் பிரபலம். அதுவும், டன் கணக்கில் விறகுகளை வாங்கி, மனுவ் (விறகு அளக்கும் அளவை) கணக்கில் விற்கும், சில்லரை வியாபாரி ஜமில் காதர்.காலை, 6:00 மணிக்கு, விறகு லோடு வருவதற்கு முன், கடைக்கு வந்தாக வேண்டும். பஜர் தொழுகை முடித்து விட்டு, 6:00 மணிக்கெல்லாம் கடைக்கு வந்து விடுவார். கை வைத்த பனியன், கட்டம் போட்ட லுங்கி, தலையில் சீனா தொப்பி, இது தான் அவருக்கான அடையாளம். காலை சாப்பாடு, மதியம் சாப்பாடு, ஏன் பல நேரம் மாலை டீயும் கடையில் தான். நேரத்துக்கு, பள்ளிக்கு போய், தொழுகையை முடித்து விட்டு வந்து விடுவார்.காலம் ஓடியது; நிலவின் வளர்ச்சி, இரவுக்கு வேண்டுமானால் அழகு சேர்க்கலாம்; ஆனால், அது தான், சூரியனின் தேய்மான காலம் என்பது,எவ்வளவு நிஜம்.
மண்ணெண்ணெய் மற்றும் கேஸ் ஸ்டவ்களின் வளர்ச்சி, கரி அடுப்புகளில் துன்பப்பட்ட பெண்களுக்கு வேண்டுமானால், விடுதலையாக இருக்கலாம். ஆனால், விறகு மண்டி நடத்தி வரும் சிறு வியாபாரிகளுக்கு, அது மிகப்பெரிய சோதனை காலமாக அமைந்தது.வேறு தொழில் அறியாதவர், ஜமில் பாய்; ரொம்பவே தடுமாறினார். 10 குழந்தைகளையும் சேர்த்து, வீட்டில் மொத்தம், 12 ஜீவன்கள். அத்தனை பேரும் சாப்பிடவும், உடுத்தவும், பெரிய போராட்டமாக இருந்தது, ஒவ்வொரு நாளும். விறகு விற்று வந்தவர், கடைசியில் கடையையே விற்று விட்டார். அப்போது தான், சென்னையில் இருந்து வந்திருந்த, சாச்சாவின் மகன் குல் முகம்மது, அந்த யோசனையை சொன்னார்.ஜமில்... நீ கஷ்டப்படுறத பார்க்கையில், மனசுக்கு ரொம்ப சங்கடமாக இருக்கு.
நம்ம சொந்தக்காரங்க நிறைய பேர் நல்லாத் தானே இருக்காங்க; அவங்க வீடுகளுக்கு புள்ளைகளை அனுப்பிச்சிடு. இதுல ரெண்டு லாபம்... அதுகளுக்கும் வயித்து பாடு தீரும்; உனக்கும் ஏதோ சம்பளம்னு வரும்... அவருடைய யோசனையும் சரியாகவே தோன்றியது.அப்போது, பனங்காய் வண்டி ஓட்டி, வாசலில் விளையாடிக் கொண்டிருந்த, 10 வயது நூர் முகம்மது, அவருடைய கண்ணில் பட்டான். அந்த யோசனையை சொன்ன நானே, அந்த வேலையை முதல்ல செய்யலாம்னு இருக்கேன். நூர் முகம்மதை, என் கூட சென்னைக்கு கூட்டிட்டு போயிடுறேன். நம்ம பிரியாணி கடைக்கு உதவியா இருக்கும்; சாப்பாடு போட்டு மாசம், 200 ரூபாய் உனக்கும் அனுப்பி வைக்கிறேன் போதுமா...அந்த நாளில், 200 ரூபாய் என்பது, ரொம்ப பெரிய சம்பளம். சந்தோஷமாய் சம்மதித்தார், ஜமில் பாய்.அன்று துவங்கியது, நூர் முகம்மதுவின் பயண ஓட்டம். காயல்பட்டினத்தில் இருந்த வரை, அரை வயிறு சாப்பாடுக்கு கஷ்டம் தான்; அதுக்கே உன்பாடு, என்பாடு என்று இருக்கும். ஆனால், உடன்பிறந்த ஒன்பது பேரும் இருப்பர்.
அடித்தால் ஆறுதல் சொல்ல அம்மாவும், யாரும் அடித்து விடாமல் பாதுகாக்க, அத்தாவின் மடியும் இருக்கும். அதையெல்லாம் பிரிந்து செல்வது ஒன்றும், லேசான காரியமாய் இல்லை.சென்னை செல்லும் ரயிலில், குல் சாச்சாவின் காலுக்கடியில் அமர்ந்தபடி, காயல்பட்டினத்தையும், தன் சகோதர, சகோதரிகளையும், நண்பர்களையும், மசூதி தெரு பெரிய பள்ளிவாசலையும், இவன் எப்போது போனாலும் விரட்டி அடிக்கும் மோதினாரையும், கடந்து போகும் போது, அந்த பாலகனுக்கு அப்படிவலித்தது.
வாழ்க்கையை புரியாத போது பிடிப்பதில்லை; வாழ்க்கை புரிந்த போது எதுவுமே வலிப்பதில்லை. வாழ்க்கையின் தாத்பரியமே பிரிவு தான் யாரோ ஒரு கவிஞன் எழுதினானே, இணைவது எல்லாம் பிரிவதற்காக என்று.அது தான் வாழ்க்கை. பிடித்தவையும், ரசித்தவையும், சுவைத்தவையும், எல்லாமுமே ஒரு நாள் நம்மைவிட்டு பிரிந்து தான் போகும். அந்த தத்துவத்தை, அவர் வெகு சீக்கிரமே புரிந்து விட்டார். இப்போதெல்லாம் சண்டையிட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சகோதரர்களைப் பற்றிய செய்திகளை, செய்தித் தாள்களில் வாசிக்க நேர்ந்தால், அவருக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.அந்த நாளில், காயல்பட்டினத்தில் கல்யாண வீட்டிற்கோ, சடங்கு வீட்டிற்கோ, அம்மாவுடன் செல்ல நேர்ந்தால், அங்கு தரும் தித்திப்பு பலகாரங்களை காகிதத்தில் சுருட்டி, தம்பி, தங்கைகளுக்கு எடுத்து வரும், பெரிய அக்காவின் அன்பை நினைக்கையில், இவர்கள் ஏன் இப்படி நடக்கின்றனர் என்று வருத்தமாக இருக்கும். தேன், இனிப்பு என்று சொல்லித் தந்த யாருமே, தேன் எடுக்கும் போது ஏற்படும் கஷ்டத்தை பற்றி பேசவேயில்லை.சாச்சா வீட்டிற்கு போனால் நன்றாக இருக்கலாம் என்று, இவருக்கு ஆறுதல் சொன்ன யாருமே, சாச்சா, சும்மா சோறு போட மாட்டார் என்று சொல்லவேயில்லை.ஐந்தாவதோடு நின்று போனது பள்ளிப்படிப்பு. சாச்சி, இவரை விரட்டி விரட்டி அடித்தாலும், சாச்சா என்னவோ, கொஞ்சம் பாசமாகத் தான் இருந்தார். இவரை குரான் படிக்கவும், தீன் காரியங்களைச் செய்யவும் அனுமதித்தார்.
சாச்சி வெறும் வாணலியில் வறுத்தெடுத்தாள் எண்ணெயின்றி. வீட்டு வேலையும், கடை வேலையும் மாறி மாறி பார்த்தார்; மனம் சோர்ந்து போனது. அவருக்கு தட்டிக் கொடுக்கவும், ஆறுதல் சொல்லவும் யாருமே இல்லை.ஒரு நாள் மஹரிப் நேரம்; பள்ளி வளாகத்தில் அமர்ந்து, மினாரில் எரிந்துக் கொண்டிருந்த விளக்கை, வெறுமையாக பார்த்தபடி இருந்தார். அப்போது, தொழுகை முடித்து வந்த வெண் தாடி பெரியவர், இவரை கனிவாய் பார்த்தபடி அருகில் வந்தார்.என்ன பேட்டா, ரொம்ப நேரமா இப்படியே உட்கார்ந்துட்டு இருக்க... நானும், உன்னை பல நாளா கவனிச்சுட்டு வர்றேன். நீ எப்பவும் இங்க வந்து உட்கார்ந்து, இந்த மினாரை வேடிக்கை பாக்குற. யார் நீ, எந்த ஊரு உன்னது?அவுல் பக்கத்தில் இருந்த மார்பிள் படித்துறையில், அவர் அமர்ந்து கொண்டார்.
இப்படி, இவனை பற்றி கனிவாய் விசாரிக்கிற ஆட்கள், காயல்பட்டினத்தில் மட்டும் தான் இருக்கின்றனர்.சொன்னான்; தன் இங்கத்திய வரவுக்கான காரணத்தை சொன்னான். பெரிய சாச்சா... எனக்கு இங்க வயிறாற சோறு கிடைக்குது; ஆனா என்னோட மனசு எங்க ஊரையும், உறவுகளையும் மட்டும் தான் நினைக்குது.
மறுபடி அங்க போவனா... எல்லாரோடயும் சந்தோஷமா இருப்பனானே தெரியல... அந்த மழலையின் கவலையை கேட்ட போது, அவருடைய கண்கள் அனிச்சையாக பனித்தது.உன் பேர் என்ன தம்பி?நூர் முகம்மது...நூர்னா என்னன்னு தெரியுமா?ம்... எங்க அம்மா சொல்லுவாங்க. வெளிச்சம்.ஆங்... அதே தான். உன் வாழ்க்கையிலும் வெளிச்சம் வரும்; வராமல் போகாது. சரி, பெரியவன் ஆனதும் என்ன பண்ணப் போற?ஒரு நொடி கூட தாமதிக்கவில்லை, நூர் முகம்மது.பெரிய சாச்சா, நான் பெரியவானானதும், சிதறிப்போன எங்க குடும்பத்தை எல்லாம் ஒண்ணாக்கணும். மலேசியாக்கார மாமூ வீட்டுல இருக்கிற எங்க அண்ணன்களையும், வேற சொந்தக்காரங்க வீடுகள்ல இருக்கிற மத்த அண்ணன், தம்பிமார்களையும் கூட்டியாந்து, நாங்க எல்லாரும் சேர்ந்து காயல்பட்டினத்துல வாழணும். எங்க குல் சாச்சா வச்சிருக்க மாதிரி, ஒரு பிரியாணி கடையை எங்க ஊர்ல வச்சி, அந்த கல்லால எங்க அத்தாவை உட்கார வைக்கணும் அவ்வளவு தான்...பிரமிப்பாய் பார்த்தார் பெரியவர்.உனக்குன்னு எதுவும் ஆசை இல்லையா?இது எல்லாமே எனக்கு தானே; நான் வேற, என்னுடைய குடும்பம் வேற இல்லையே சாச்சா... அவர் பிரமித்துப் போனார்.பேட்டா, இறைவன் யார் கேட்டதும் முதல்ல கொடுப்பான் தெரியுமா? தனக்காக எதுவும் கேட்காமல், பிறருக்காக நல்லது செய்னு கேட்குறவங்க துவாவை, இறைவன் உடனடியா கபூல் பண்றான்... நீ, இந்த வயசுலயே உன் குடும்பம் தான்னு சொல்றியே, உன்னுடைய துவா கண்டிப்பா கபூல் ஆகும்...நிஜமாவா சாச்சா?ஆமாம் பேட்டா... மனிதர்களிடம் சொல்லி, நம் கவலைகளுக்கு ஆறுதல் தேடுறது முட்டாள்தனம்; நமக்கான நிரந்தரமான மாற்றத்தையும், முன்னேற்ற த்தையும் இறைவன் மட்டுமே நமக்குத் தருவான். ஆயிரம் தாய்க்கு சமமான இறைவன் தான் நமக்கு, தாய், தகப்பன், ஏன் நண்பனும் கூட... உனக்கு என்ன வேணுமோ, இனி, நேரிடையா அவன்கிட்டயே கேளு; அது எத்தனை சீக்கிரம் உனக்கு கிடைக்குதுன்னு பாரு...நிலம் ஒன்று தான்; அதில், விழும் விதைகளின் வகையைப் பொறுத்து தான், மரங்களின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. அன்று, அந்த பெரியவர் போட்ட விதை நல்விதையாக இருந்தது. அந்த வயதில், அவர் கற்றுக் கொடுத்த முறை, அவரை, ஊர் முன்னால் ஜனாப் நூர் முகம்மது சாகிப் ஆக்கி நிறுத்தியது.
குல் சாச்சாவிடம் கற்ற பிரியாணி தொழில், பிற்காலத்தில் தனியாய் கடை போட்டு, அது விரிந்து பல கிளைகளாகி, பட்ட கஷ்டங்களை எல்லாம் நொடியில் மறக்க வைத்தது.இறைவனை நெருங்கி இரு; எல்லாமே லேசாகும்... என்ற அரிய தத்துவத்தை கற்றுக் கொடுத்த பெரியவரை, அவர் எப்போதும் நினைத்துக் கொள்வார். அதற்கு பின் வந்த பல நாட்களும், அதே பள்ளிக்கு சென்று, அவரை பார்க்க காத்திருந்தார். வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்த பிறகும், ஏன் இப்போது வரைக்கும், அவருக்காக காத்துக் கொண்டு தான் இருக்கிறார் அந்த பள்ளி வளாகத்தில்.
ஆனால், ஏனோ அந்த பெரியவர் மறுபடியும் அங்கு வரவேயில்லை.
உலக வாழ்வோடு ஒட்டாமல் வாழப் பழகிக் கொண்டார். இந்த உலகில் இந்த சிந்தனை கொள்வது தான், நிஜத்தில் கஷ்டமான விஷயம். நிலை உயரும் போது, பணிவு கொள்வது தான் மிகவும் உயர்ந்த நிலை. அவர் கண்ட கனவுகளை மெல்ல மெல்ல நிறைவேற்றினார்.
தம்பிகள், அண்ணன்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்கு இசைவான தொழில்களை அமைத்துக் கொடுத்தார்; அத்தா தவறிப் போயிருக்க, அம்மாவை தன்னோடு வைத்துக் கொண்டார்; யாருக்கும் எந்த குறைவையும் தராத நிறைவை தர முயற்சி செய்தார்.உம்ரா, ஹஜ் என்று அந்த கடமைகளையும் நிறைவேற்றியாயிற்று.
ஆனால், இன்றும் கூட பள்ளிக்கு சென்று, அந்த பெரியவரை தேடுவதை மட்டும் நிறுத்தவேயில்லை.பிரியாணி கடையில் இருந்த, ஏசி அறையில், கொஞ்சம் ஆசுவாசமாய் அமர்ந்து இருந்தார். அந்த பிரதான சாலையில் இருந்த நான்கு அடுக்கு மால், இவருக்கு சொந்தமாய் இருந்தது. அந்த இடமே, இன்றைய தேதிக்கு பல கோடி போகும் எனும் போது, இன்றைக்கு அவருக்கு இருக்கும் செல்வாக்கை சொல்லி மாளாது. அறைக்கதவை பணிவாய் தட்டி, உள்ளே வந்தார், அபுபக்கர்.அஸ்ஸலாம் அலைக்கும் பாய்...வலைக்கும் சலாம்...முகமன் பரிமாற்றத்திற்கு பின், தனக்கு முன்புறமாய் இருந்த நாற்காலியை அபுபக்கர் அமர, நகர்த்திப் போட்டார்.
சொல்லுங்க பாய்...
""கரீம் நகர்ல, பள்ளி கட்டுற விஷயமா உங்ககிட்ட பேசிட்டு போயிருந்தேன், நினைவு இருக்கா?
அல்ஹம்துலில்லா... நினைப்பு இல்லாம என்ன? நான் வாசிம் பாய்கிட்ட சொல்லிட்டேன். அவருடைய எலக்ட்ரானிக் கடையில இருந்து, பள்ளி முழுவதுக்கும் எத்தனை, ஏசி தேவையோ, அத்தனையையும் எடுத்துக்கங்க; நான் அதுக்கான தொகையை அவருக்கு அனுப்பி வச்சுடறேன்...வாயடைத்துப் போனார் அபுபக்கர்.
அத்தனை, ஏசியும் நீங்களே தர்றீங்களா... 10, ஏசி தேவைப்படும் ஒரு, ஏசி யோட விலை, 30 ஆயிரம்னாலும், 10, ஏசியோட விலை, 3 லட்சமாகுமே... என்று சொல்லி இழுத்தார்.
ஆகட்டுமே இப்பயென்ன... இந்த காசும், பணமும், செல்வமும் அவன் குடுத்தது. அவனுடைய பள்ளிக்கு திருப்பிச் செய்ய என்ன வருத்தம் பாய்...ஆஹா... இப்படி கேட்டதும், ஒரு நொடியில் வாரி வழங்கி, நீங்க ஒரு வாழும் வள்ளல்னு நிரூபிச்சுட்டீங்க. இந்த மனசு யாருக்கு வரும்? உங்களை விட பணக்காரர்னு சொல்லிக்கிறவங்க எல்லாரும் ஆயிரம், இரண்டாயிரம் தர்றதுக்கே யோசிக்கும் போது, நீங்க செய்த உபகாரம், வார்த்தைகள் அற்றது. இதற்கான நற்கூலியை கண்டிப்பா அல்லாஹு உங்களுக்கு தருவான்...அவர் பேசப்பேச, நூர் பாயின் முகம் சந்தோஷத்திலும், பெருமிதத்திலும் நிறைந்திருந்தது. அவரை அழைத்துக் கொண்டு, லிப்ட் வழியாக, கீழ்தளத்திற்கு வந்தார்.
மதிய நேரம் என்பதால், கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. கண்ணாடி கதவிற்கு பின்னால் நின்ற வயதான முசாபிர் ஒருவர், கடைக்குள் வாடிக்கையாளர்கள் சாப்பிடுவதை ஏக்கமாய் பார்த்தபடி நின்றார். இதை கவனித்த நூர் பாய், கடை சிப்பந்தியை அழைத்து, அவருக்கு இரண்டு பிரியாணி பொட்டலங்கள் கொண்டு போய் கொடுக்கச் சொன்னார்.எதற்கு இரண்டு பொட்டலங்கள் என்பது போல பார்த்தார், பக்கத்தில் நின்ற அபுபக்கர்.
நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு புரியுது பாய்... குறைந்தபட்சம் அந்த ஏழையோட இந்த முழு நாளைய பசியையாவது போக்க, நம்மாள ஆன சின்ன முயற்சியா தான், இப்ப ஒண்ணு, ராத்திரிக்கு ஒண்ணு குடுக்க சொன்னேன்...அவருடைய கருணை உள்ளத்தை பார்த்து, நெக்குருகி போய் நின்றார், அபுபக்கர்.சுபுகானல்லா...!
உங்களை மாதிரி இருக்கிறவங்க கையில காசும், பணமும் இருக்கும் போது தான், அது, அதுக்கான மதிப்பை உண்மையா பெறுது. அல்லா உங்களை எந்த குறையும் இல்லாமவைக்கணும்...
அவருடைய வார்த்தைகள், மனதிற்குள் இனம்புரியாத குளிர்ச்சியை தந்தது.அவருடைய சொல்படி, இரண்டு பொட்டலங்களை கடை சிப்பந்தி, அந்த முசாபரிடம் கொண்டு சேர்க்க, அவர் நன்றி சொல்லி வாங்கிக் கொண்டார்.தாதா.. எனக்கு ரொம்ப பசிக்குது; உன்கிட்ட இருந்தா ஏதாவது குடேன்... அந்த முசாபிருக்கு பின்னால் நின்ற சிறுமி, தலையை சொறிந்தபடி கேட்க, ஒரு நொடியும் தாமதிக்காமல், தன் கையில் இருந்த பொட்டலங்களில் ஒன்றை, அந்த பெண்ணிடம் தந்தார். அதை வாங்கியபடி, அந்தப்பெண் துள்ளி குதித்து, அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.யோவ், நீ சாப்பிடுனு குடுத்தா, நீர் அதை இன்னொருத்தருக்கு தானம் பண்ணுறிறா... பெரிய இவரு இவரு...
கடை சிப்பந்தி கேலியும், நக்கலுமாய் கேட்க, அந்த முசாபர் நின்று, திரும்பிப் பார்த்தார்.
எனக்கு இது ஒண்ணு போதுமே...அப்ப ராத்திரிக்கு...ஆண்டவன் தருவான்...ஆமாம். அவனுக்கு வேற வேலை இல்ல பாரு...! உனக்கு மூணு வேளையும் பிரியாணி பொட்டலம் பார்சல் அனுப்பறதுக்கு...எனக்கு அவன் தருவான்கிறதுல எந்த சந்தேகமும் இல்லை. உனக்கு அந்த சந்தேகம் இருந்தா, அது உன்னோட கவலை; என் கவலை இல்ல...அவருடைய உறுதியான வார்த்தைகள், உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த நூர் முகம்மதுவையும், அபுபக்கரையும் ஸ்தம்பிக்க வைத்தது.கொழுப்ப பாரு... பாவமா பார்த்துட்டு நின்னயேன்னு ரெண்டு பொட்டலம் தந்தா, நன்றி இல்லாம, குடுத்த எங்களையே பேசுறியா? இதெல்லாம் எங்களுக்கு ரொம்ப தேவை தான், என்றான், கடை சிப்பந்தி அலுப்பாக.திரும்பி பார்த்து சிரித்தார் முசாபர்.நன்றிக்காகவும், பாராட்டுக்காகவும் செய்றதுக்கு பேர் தர்மம் இல்லை. நீ எனக்கு குடுத்த... உனக்கு யார் குடுத்தா? எனக்கு குடுத்ததுக்காக நான் நன்றி காட்டணும்னு சொல்றியே...
நீ, உனக்கு குடுத்தவனுக்கு நன்றி சொன்னியா? சொளேர் சொளேர் என்று வந்து விழுந்த வார்த்தைகளில், ஆடிப் போனார் நூர் முகம்மது.ரொம்ப பேசுற நீ... அது சரி, நான் தெரியாமத்தான் கேட்குறேன், ராத்திரியும் உனக்கு பிரியாணி தான் கிடைக்கும்னு நம்புறியா? ஒருவேளை கிடைக்காம போனா, அநியாயமா மதியம் கிடைச்ச பிரியாணியை இழந்துட்டு, இப்போ இப்படி சாதாரண சோறு திங்கறோமேனு வருத்தப்பட மாட்டியா? என்றான் சிப்பந்தி, அவன் செயலில், இன்னும் நம்பிக்கை வராமல்.நின்று அவன் முகத்தை உற்றுப் பார்த்தார் முசாபர்.
மெல்ல புன்னகைத்தார்.எனக்கு இருக்கிறது ஒரே ஒரு ஆசை தான்... எது மேலயும் ஆசையே வைக்கக்கூடாதுங்கறது மட்டும் தான் என் ஆசை... சொல்லிவிட்டு விடுவிடுவென நடந்து போனார்.
ஸ்தம்பித்து நின்றார் நூர் முகம்மது. தான் செய்த தர்மத்தை மற்றவர்கள் பாராட்டிய போது, அதற்காக ஆசைப்பட்டது போல நின்றதும், ஒரு ஆசை தானே... அதுகூட தன்னிடம் இருக்கக் கூடாது என்று இறைவன் தெளிய வைக்கிறானா?அன்றொரு நாள், அவரை வாழ்க்கையில் உயர்த்த ஒரு பெரியவர் மூலமாக நல்வழி காட்டியதும், இன்று அவருடைய சிந்தனையில் திருத்தம் செய்ய, ஒரு முசாபர் மூலமாய் அறிவுறுத்தியதும், இறைவனின் கருணை என்று உணர்ந்த போது, கை, கால்கள் தானே நடுங்கின. அதே நேரம், மிகச்சரியாக லொஹர் தொழுகைக்கான அதான் பள்ளியில் ஒலித்தது.
எஸ்.பர்வின் பானுகவிதை வாழ்ந்தது வரலாறு!நன்மையை தரும்புனித யாத்திரை துயரங் களை துரத்தும் ஆன்மிக யாத்திரை வாழ்வில் ஒருமுறைஹஜ்ஜிற்கு சென்றால் வாழ்ந்தது வரலாறுஉண்மையைஉணராமல்வீழ்ந்தவர் அது வேறுஉன் வழியில் நாம் வைத்தால் ஓரடி...உன் அருள்வரும் ஓடோடி...இல்லம் உனதுவந்தால் தேடிகிடைக்கும்பேறோ கோடி!உருது மூலம் - ஸமீரா யூசுப்தமிழில் - ஜயீத் ஆசிம் இறந்தும் பிழைப்பவன்! நமக்காக இந்தஉலகை படைத்தவன் மனிதனோ அதைபல பிரிவாய் உடைத்தவன்உணர்ந்தவன் இதைஅவன் ஆசிகிடைத்தவன் நேர்வழி செல்வான்கர்வத்தை அடைத்தவன்ஒவ்வொரு நொடியும் அமைதிக்காக உழைப்பவன்இருந்தும் சவங்களின்இடையேஇறந்தும் பிழைப் பவன்!உருது மூலம் - ழேர் தாஷ்தமிழில் - நவாலி நதீம் அஹ்மத்அவன் அருளை தேடு! பாடுஅவன் புகழை பாடுஆடுஅவன் நினைவில் ஆடுஓடுஅவன் திசையில் ஓடுதேடுஅவன் அருளை தேடுநாடுஅவன் தயவை நாடுகேடுஅவனை மறந்தால் கேடுவீடு அவன் இல்லமே வீடு.உருது மூலம் - ஆனூப்தமிழில் - எம். ஸாதத் இம்மாத்