பதிவு செய்த நாள்
25
ஆக
2018
02:08
திருத்தணி : விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் கொண்டாடப்படும் நிலையில், பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள், திருத்தணியில் மும்முரமாக நடந்து வருகின்றன. நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம், 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திருத்தணி சேகர்வர்மா நகர், பெரியார் நகர் மற்றும் கே.ஜி. கண்டிகை ஆகிய பகுதிகளில், எட்டு பேர் கொண்ட குழுவினர், சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இங்கு தயாரிக்கப்படும் சிலைகள், 1.5 அடி முதல், 15 அடி உயரம் வரை, பேப்பர் மோல்டு களால் தயார் செய்து வருகின்றனர். இந்த சிலைகள், தண்ணீரில் எளிதாக கரையும். வாட்டர் கலர் பெயின்ட் மூலம் பல்வேறு வண்ணங்களில் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.விநாயகர் சிலைகள், கற்பக விநாயகர், வேட்டை விநாயகர், கருட விநாயகர், அரியணையில் முண்டாசு கட்டி அமர்ந்த நிலையில் விநாயகர். ஆஞ்சநேயர், நரசிம்மர், கலைவாணி, சரஸ்வதி உட்பட மூன்று தலைகளுடன், பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விநாயகர் சிலைகளின் விலை, 200 ரூபாய் முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.தற்போது, ஜி.எஸ்.டி., வரியால், மூலப்பொருட்கள் விலை அதிகரித்துள்ளதால், விநாயகர் சிலைகளின் விலையும் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு கூடுதல் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.