பதிவு செய்த நாள்
30
ஆக
2018
12:08
வடமதுரை: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலய ஆண்டு திருவிழாவிற்காக கொசவபட்டி கிராமத்தை சேர்ந்த 300 பக்தர்கள் ஒரே குழுவாக பாதயாத்திரை செல்கின்றனர். இத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கி செப்.8 வரை நடக்க உள்ளது. இதற்காக திண்டுக்கல், தேனி மாவட்ட பக்தர்கள் சிறு, சிறு குழுக்களாக வடமதுரை வழியாக வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக சென்ற வண்ணம் உள்ளனர். இவர்களில் பலர் கொடி, சிலுவையை ஏந்தியும், சப்பரம், தேர், சைக்கிள் ரிக் ஷா போன்றவற்றில் மாதா சிலையுடன் பக்தி பாடல்களை ஒலிபரப்பியும் செல்கின்றனர். சாணார்பட்டி அருகே கொசவபட்டி பக்தர்கள் 300 பேர் நேற்று முன்தினம் இரவு ஒரே குழுவாக பாதயாத்திரையை துவக்கினர். அக்குழு காணப்பாடி, சித்துார் வழியே வடமதுரை வந்தது. செபஸ்தியான் என்ற பக்தர் கூறுகையில், ‘மணப்பாறை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியே செப்.4ம் தேதி வேளாங்கண்ணி சென்றடைவோம். காலையில் வெயில் வரும் வரையும், மாலை துவங்கி நள்ளிரவு வரையும் நடப்போம்’ என்றார்.