பதிவு செய்த நாள்
06
செப்
2018
02:09
கோத்தகிரி: கோத்தகிரியில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் குறித்து, அரசு அதிகாரிகள் மற்றும் இந்து அமைப்பினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழா, வரும், 13ம் தேதி நடக்கிறது. இவ்விழாவை முன்னிட்டு, இந்து முன்னணி, அனுமன் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், கோத்தகிரி நகரம் மற்றும்
கிராமப்புறங்களில், 150க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.பூஜிக்கப்பட்ட சிலைகள், 16ல், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, உயிலட்டி நீர்வீழ்ச்சியில் விசர்ஜனம் செய்யப்படுகிறது. மேலும், அன்றைய தினம், டானிங்டன்
பகுதியில், இந்து எழுச்சி பொது கூட்டமும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில், பொது கூட்டம் மற்றும் விசர்ஜன ஊர்வலத்தை அமைதியாக நடத்துவது குறித்து, கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில், இந்து அமைப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள்
பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
குன்னூர் ஆர்.டி.ஓ., பத்ரிநாத் தலைமை வகித்தார். கோத்தகிரி தாசில்தார் ரவிக்குமார் முன்னிலை வகித்தார். காவல் துறை, நெடுஞ்சாலைத்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், விநாயகர் சிலைகள் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்தில் வைத்து பூஜிக்கவேண்டும்; எளிதில் தீப்பிடிக்க கூடிய வகையில் இல்லாமல், தகர செட்கள் அமைத்து,
பாதுகாப்பான இடங்களில் சிலைகள் வைக்கவேண்டும்; விசர்ஜன ஊர்வலம், ஒதுக்கப்பட்ட சாலைகளில்தான் செல்லவேண்டும் என, அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர்.