“விநாயகர் மீது அவ்வைப்பாட்டிக்கு பக்தி வந்தது எப்படி?” என்று காஞ்சி மகாசுவாமிகளிடம் கேட்டார் பக்தர் ஒருவர். “பாட்டி என்றாலே முதுமை காரணமாக காலை நீட்டியபடி ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது வழக்கம். ஆனால் அவ்வையோ ஊர் ஊராகச் சுற்றி தமிழையும், ஆன்மிகத்தையும் பரப்பினாள். குழந்தையோ சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் தவழ்ந்தும், நடந்தும் திரியும். ஆனால் குழந்தை தெய்வமான விநாயகர் தொப்பை வயிற்றுடன் யானை முகம் கொண்டவராக ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்கிறார். ’கல்லுப்பிள்ளையார் மாதிரி அசையாமல் இருக்கிறாயே’ என்று கேலி கூட பேசுவதுண்டு. வேடிக்கையான பாட்டியாக அவ்வையாரும், வேடிக்கையான குழந்தையாக விநாயகரும் இருக்கின்றனர் என்றால் மிகையில்லை.
உயிர்களுக்கெல்லாம் பெற்றோரான பார்வதி, பரமேஸ்வரனின் மூத்த பிள்ளை என்பதால் விநாயகரை ’பிள்ளையார்’ என அழைக்கிறோம். வாழ்வில் வரும் தடைகளை (விக்னம்) போக்குவதால் ’விக்னேஸ்வரர்’ என்றும் பெயர் பெற்றார். எப்போதும் முதல் பூஜை இவருக்குத் தான். ’குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்பார்கள். குழந்தை வடிவில் அருள்புரிபவர் என்பதால் அவரை அனைவரும் இஷ்டதெய்வமாக கொண்டாடுகிறார்கள். அவ்வையார் வாழ்வு முழுவதும் ஓடியாடி ஆன்மிகப் பணி செய்ததற்கு இந்தப் பிள்ளையின் அருளே காரணம். தான் சென்ற இடமெல்லாம் விநாயகர் பக்தியைப் பரப்பினாள். தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் அரசமரத்தடி விநாயகர் கோயில் உருவாக இவளின் ஆன்மிகப்பணியே காரணம். இந்தியாவில் வேறெங்கும் இந்த அளவுக்கு விநாயகர் கோயில்கள் கிடையாது. ’சீதக் களப செந்தாமரை’ எனத் தொடங்கும் அவ்வையாரின் விநாயகர் அகவல் ஒரு யோகசாஸ்திர நூல். இதன் பொருள் புரியாவிட்டாலும் பக்தர்கள் தினமும் படிக்க கைமேல் பலனாக நன்மை சேரும். நாளடைவில் அதன் பொருள் புரிவதற்கு இறையருள் துணைபுரியும். அவ்வையாரின் விசேஷ குணத்தால் அவருக்குப்பின் எத்தனையோ தலைமுறைகள் வந்த பிறகும் கூட நாம் படிக்க ஆரம்பிக்கும் போது ஆத்திசூடியே முதலில் வருகிறது” என்றார் காஞ்சி மகாசுவாமிகள். பிள்ளையார் பக்தரான பாட்டியின் அருமையறிந்த பக்தர் மகிழ்ந்தார்.