சிறுமி ஒருத்திக்கு இரண்டு கோழிக்குஞ்சுகள் பரிசாகக் கிடைத்தன. அன்றிலிருந்து கோழிக்குஞ்சுகளும் அவளும் இணைபிரியாத நண்பர்களாக மாறினர். தான் சாப்பிடும் போது அந்த குஞ்சுகளின் பசியாற்றி அவள் மகிழ்வாள். தான் தெருவில் செல்லும் போதெல்லாம் அவைகளையும் கூட்டிச் செல்வாள். தான் சேமித்த காசை செலவழித்து தானியம் வாங்கிக் கொடுப்பாள். அவளுடைய பராமரிப்பில் குஞ்சுகள் கொழுகொழுவென இருந்தன. ஒரு நாள் தற்செயலாக குஞ்சுகள் எதிர்வீட்டு தோட்டத்தில் நுழைந்தன. அதைக் கண்ட எதிர்வீட்டுக்காரர் குஞ்சுகளை அடித்து வேலிக்கு வெளியே வீசினார். அவை செத்துப் போய் தெருவில் விழுந்தன. அவ்வளவு தான்.. குஞ்சுகளைக் கண்ட சிறுமி மனம் உடைந்தாள். எந்த ஆறுதலையும் அவளது மனம் ஏற்கவில்லை. கதறி அழுதாள். சிறிது நேரம் கழிந்தது. ஒருவழியாக சமாளித்துக் கொண்டு எழுந்தாள். இறந்த குஞ்சுகளை தன் பிஞ்சுக் கைகளால் எடுத்து அம்மாவிடம் ஓடி வந்தாள். அதை சமைத்து தரச் சொல்லிக் கேட்டாள். அம்மாவுக்கோ ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் சமைத்தார். சிறுமி அந்த உணவை முகர்ந்து கூட பார்க்கவில்லை. உணவை ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு எதிர்வீட்டுக்கு சென்றாள். “மாமா... நீங்கள் பசியாக இருப்பதால் உங்களுக்கு இந்த உணவை கொடுக்க சொல்லி ஆண்டவர் அனுப்பியுள்ளார்” என்று சொல்லி கொடுத்தவள், திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்கு நடந்தாள்.
அவளுடைய வார்த்தைகள் சம்மட்டியால் அடித்தது போல காதில் விழுந்தது. செய்வதறியாமல் எதிர்வீட்டுக்காரர் தேம்பி அழுதார்.“நான் உங்களுக்கு சொல்கிறேன்; உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்” என்னும் “உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக் கொள்கிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடை பண்ணாதே” என்னும் பைபிள் வசனங்கள் அவரின் மனதில் எதிரொலித்தன.