கூடலூரில் கண்ணகி கோயில் உரிமை மீட்பில் மவுனம் ஆலய பாதுகாப்புக்குழு குற்றச்சாட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18செப் 2018 01:09
கூடலூர் : மங்கலதேவி கண்ணகி கோயிலின் உரிமையை மீட்க குரல் கொடுக்க தமிழக அரசியல்வாதிகள் மவுனம் காட்டுகின்றனர்,என, இந்து ஆலய பாதுகாப்புக்குழு மாநில தலைவர் தெய்வபிரகாஷ் குற்றம் சாட்டினார்.
தமிழக, கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் யாருக்குச் சொந்தம் என்பதில் இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்னை பல ஆண்டாக நீடிக்கிறது. கோயிலுக்கு செல்ல கேரள வனப்பகுதி வழியாக ஜீப் பாதை உள்ளது. தமிழகப்பகுதி வனப்பகுதியான தேனி மாவட்டம் பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ., நடைபாதை உள்ளது. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி நாளன்று மட்டும் வழிபட அனுமதி உண்டு. பளியன்குடி வனப்பாதையை வாகனங்கள் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன.
இந்து ஆலய பாதுகாப்புக்குழுவின் மாநில தலைவர் தெய்வபிரகாஷ் நேற்று (செப்., 17ல்) பளியன்குடி வனப்பாதையை பார்வையிட வந்தார். வனத்துறையினரால் பளியன்குடியில் தடுத்து நிறுத்தப்பட்டார்.தெய்வபிரகாஷ் கூறும்போது, கண்ணகி கோயில் ரிசர்வ் வனப்பகுதியில் இருப்பதால் சட்டத்திற்கு உட்பட்டு வழிபாட்டு உரிமையை பெற வேண்டும். கோயிலுக்கு செல்ல பளியன்குடி வழியாக ஏற்கனவே உள்ள ரோட்டை வாகனங்கள் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும்.
தமிழக - கேரள பக்தர்கள் இணைந்து கோயிலை சீரமைக்க வேண்டும். தமிழக பக்தர்களுக் கான உரிமையை மீட்க குரல் கொடுக்க தமிழக அரசியல்வாதிகள் மவுனம் காட்டுகின்றனர். தமிழக வனப்பகுதி வழியாக ஜீப் பாதை அமைக்க மத்திய ,மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, என்றார். மாநில அமைப்பாளர் சுடலைமணி, மாவட்ட செயலாளர் ராஜகுரு பாண்டியன், துணைத்தலைவர் முத்தையா உடனிருந்தனர்.