பதிவு செய்த நாள்
04
பிப்
2012
10:02
நாமக்கல்:நாமக்கல் ஆஞ்சநேயர் சுவாமிக்கு, ஒரு கோடியே 69 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கக்கிரீடத்தை, புனேவைச் சேர்ந்த பக்தர்கள் காணிக்கையாக வழங்கினர். அக்கிரீடம், நேற்று சுவாமிக்கு அணிவிக்கப்பட்டது.நாமக்கல் கோட்டை சாலையில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. சுவாமிக்கு, அவ்வப்போது வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டுக்கு முன், பக்தர்கள் சார்பில், சுவாமிக்கு தங்கக் கவசம் சாத்தப்பட்டது.
தற்போது, புனேவைச் சேர்ந்த பக்தர்கள், சுவாமிக்கு, தங்கத்தாலான கிரீடத்தை காணிக்கையாக வழங்கியுள்ளனர். அந்த கிரீடம், ஆறரை கிலோ எடை கொண்டது. மேலும், அக்கிரீடம், ஒரு கோடியே 69 லட்ச ரூபாய் மதிப்புடையது. நேற்று மதியம், 2.30 மணியளவில், சுவாமிக்கு தங்கக்கிரீடம் சாத்தப்பட்டது.இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், "புனேவைச் சேர்ந்த பக்தர்கள், சுவாமிக்கு தங்கக்கிரீடம் வழங்கியுள்ளனர். அதை முறைப்படி பெற்றுக் கொள்ளும் வழிமுறை, அதிகாரிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்படும். நகை மதிப்பீட்டாளர் மூலம் ஆய்வு செய்தால் தான், அதன் முழு மதிப்பு தெரியவரும் என்றனர்.