பதிவு செய்த நாள்
04
பிப்
2012
11:02
திருச்சி: திருச்சி வயலூர் முருகன் கோவிலில், வரும் ஏழு மற்றும் எட்டாம் தேதிகளில் தைப்பூச பெருவிழா வெகு சிறப்பாக நடக்கவிருக்கிறது. இதுகுறித்து வயலூர் முருகன் கோவில் செயல் அலுவலர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி வயலூர் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா வெகு சிறப்புடன் கொண்டாடுவது வழக்கம். வரும் ஏழாம் தேதி தைப்பூச தினத்தன்று, அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அர்ச்சனைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு, அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. மதியம் ஒரு மணிக்கு, முத்துக்குமார ஸ்வாமி புறப்பட்டு, உய்யக்கொண்டான் ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது. அதன்பின் ஸ்வாமி, அதவத்தூர் ஆற்றங்கரை மண்டபத்தை சென்றடைகிறார். மண்டபத்தில் தங்கும் ஸ்வாமிக்கு, இரவு 7 மணியளவில், சர்வ அலங்காரத்துடன் மஹா தீபாராதனை நடக்கிறது. இரவு 8 மணிக்கு, மண்டபத்தில் இருந்து புறப்பட்டு, வரகாந்திடலை அடைகிறார். இரவு 10 மணிக்கு மண்டகப்படி பெற்று, கீழ வயலூர் தைப்பூச மண்டபத்துக்கு, நள்ளிரவு 12 மணிக்கு வந்தடைகிறார். ஸ்வாமிக்கு மஹா தீபராதனை நடந்து, நள்ளிரவு ஒரு மணிக்கு புறப்பட்டு, வடகாபுத்தூர் கிராமத்தை அடைகிறார். மறுநாள் (8ம் தேதி) காலை 8 மணிக்கு, வடகாபுத்தூரில் இருந்து புறப்பட்டு, உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர், அல்லித்துறை பார்வதீஸ்வரர், சோழங்கநல்லூர் காசி விஸ்வநாதர், சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன் ஆகிய கிராம ஸ்வாமிகளுக்கு சந்திப்பு கொடுக்கும் நிகழ்ச்சி 10 மணிக்கு நடக்கிறது. தொடர்ந்து சோமரசம்பேட்டை நான்கு வீதிகளில் ஸ்வாமி வலம் வந்து, சோமரசம்பேட்டையில் உள்ள தைப்பூச மண்டபத்துக்கு மதியம் 12 மணிக்கு வருகிறார். அங்கு அனைத்து ஸ்வாமிகளும் தங்கி, இரவு 7 மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
இரவு 7.30 மணியளவில், ஸ்வாமிகள் தத்தமது கோவில்களுக்கு புறப்பாடாகின்றனர். விழா ஏற்பாடுகளை, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் இளம்பரிதி, உதவி ஆணையர் தங்கமுத்து அறிவுரைப்படி கோவில் பணியாளர்கள் செய்கின்றனர்.
தைப்பூச தினத்தன்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வயலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு ஏற்பாடுகளை சோமரசம்பேட்டை போலீஸார் செய்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.