பதிவு செய்த நாள்
19
செப்
2018
11:09
சேலம்: சேலத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ராஜகணபதி, குமாரகணபதியாக நேற்று(செப்., 18ல்) அருள்பாலித்தார். சேலம், தேர்வீதியில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது.
இங்கு, விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் வெகுவிமர்சை யாக கொண்டாடப்படும். இந்தாண்டு விழா கடந்த, 13 ல் துவங்கியது. ஆறாவது நாளான நேற்று (செப்.,18ல்) காலை, 6:00 மணி முதல் சிறப்பு பூஜை நடந்தது. பிறகு இளநீர், தயிர் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மாலையில், குமார கணபதி அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டது. ஏராளமானோர் கோவி லுக்கு வந்து அருகம்புல், எருக்கமாலை ஆகியவற்றை வைத்து வழிபட்டனர். தொடர்ந்து சத்தாபரணம் நிகழ்ச்சி நடந்தது. இதில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பல்லக்கில் சுவாமி ஊர்வலம் நடந்தது.
அப்போது, முதல் பல்லக்கில் சுகவனேஸ்வரர் சுவாமி, சொர்ணாம்பிகை அம்மனுடனும், இரண்டாவது பல்லக்கில் பாலாஜி கணபதியும், மூன்றாவது பல்லக்கில் யோக கணபதியும், நான்காவது பல்லக்கில் சிற்பிக்குள் முத்து கணபதியும் இடம்பெற்றிருந்தன. ராஜகணபதி கோவில் முன்புறமிருந்து சுவாமியுடன் புறப்பட்ட பல்லக்கு, முதல் அக்ரஹாரம், சின்னக் கடை வீதி, வ.உ.சி., மார்க்கெட் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. ஏராளமானோர் சுவாமியை வழிப்பட்டனர்.