பதிவு செய்த நாள்
20
செப்
2018
10:09
வடவள்ளி: சுண்டப்பாளையம், ஸ்ரீநிவாச வரதராஜப் பெருமாள் கோவில், புரட்டாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு , தேர் திருவிழா வெகுவிமர்சையாக நேற்று நடந்தது.சுண்டப்பாளையத்தில் உள்ள ஸ்ரீநிவாச வரதராஜப் பெருமாள் கோவில், பல நுாற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. இக்கோவில், புரட்டாசி பிரம்மோற்சவம், கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.ஐந்தாம் நாள், கருட சேவை திருவீதியுலா கோலாகலமாக நடந்தது. காலை 5:00 மணிக்கு ரதாரோஹணம் உற்சவம் நடந்தது. 9:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியாருடன் வாகன மண்டபத்தில் எழுந்தருளினார். காலை, 9:25 மணிக்கு பெருமாள் தேவியாருடன் தேரில் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று, ’கோவிந்தா கோவிந்தா’ கோஷங்களுடன் சுவாமியை தரிசித்து சென்றனர்.திருத்தேர் நான்கு ரதவீதிகளின் வழியாகவும் வந்து, நேற்று மாலை தேர்நிலையில் நிறுத்தப்பட்டது.