திருப்பரங்குன்றத்தில் சஷ்டி பக்தர்களுக்கு மண்டபம் அமையுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20செப் 2018 10:09
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவின் போது தங்கி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்காக அடிப்படை வசதிகளுடன் கூடிய மண்டபம் அமைக்க வேண்டும். இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது பல்வேறு மாவட்டங்களிலிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் காப்பு கட்டி கோயில் மண்டபங்கள், வளாக திறந்த வெளியில் 6 நாட்கள் தங்கி விரதம் மேற்கொள்வர். இக்கோயில் வளாகத்தில் குறைந்த எண்ணிக்கையில் கழிப்பறைகள் உள்ளன. குளிக்க வசதிகள் இல்லை. கோயில் மண்டபங்களில் தங்கும் பக்தர்கள் அதிகாலை, இரவு சரவணப்பொய்கையில் நீராடி மலையை சுற்றி வருவர். அங்குள்ள திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
சில ஆண்டுகளாக மழையின்றி சரவணப் பொய்கை தண்ணீர் மாசுபட்டு துர்நாற்றம் வீசுகிறது. குளிப்பவர்களுக்கு உடலில் அரிப்பும் ஏற்படுகிறது. கோயில் வளாகத்தில் திறந்தவெளியில் தங்கும் பக்தர்கள் மழை பெய்தால் சிரமத்திற்கு ஆளாகின்றனர். விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் மண்டபங்களில் தங்குவதால் கோயிலுக்கு வரும் மற்ற பக்தர்கள் சிரமப்படுகின்றனர். விரதம் மேற்கொள்ளும் பக்தர்களிடம் நபர் ஒருவருக்கு 45 ரூபாய் உபய காணிக்கையாக கோயில் நிர்வாகம் வசூலிக்கிறது. விரதமிருக்கும் பக்தர்கள் ஒரேயிடத்தில் தங்க அடிப்படை வசதிகளுடன் சரவணப் பொய்கை செல்லும் வழியிலுள்ள 80 சென்ட் கோயில் இடத்தில் சஷ்டி மண்டபம் கட்ட வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தப்படுகிறது. சஷ்டி தவிர மற்ற நாட்களில் அந்த மண்படத்தை யாத்திரிகள் தங்க பயன்படுத்தலாம். பக்தர்களுக்கு குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு விடலாம். இதன் மூலம் கோயிலுக்கு வருவாயும் கிடைக்கும். இதுகுறித்து திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றி பெறும் எம்.எல்.ஏ., இந்து அறநிலையத்துறை மூலம் அரசை வற்புறுத்தி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.