ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனி உற்ஸவத்தை முன்னிட்டு பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பக்தர்கள் குவிந்திருந்த நிலையில், அதிகாலை 2:30 மணிக்கே நடைதிறக்கபட்டு பக்தர்கள் பிரகாரம் சுற்றி வந்தனர். பெருமாளுக்கு சுப்ரபாதபூஜை, சிறப்பு திருமஞ்சன அபிசேகங்கள் மற்றும் அலங்கார பூஜைகளை கிரிபட்டர் செய்தார். ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசித்த பக்தர்கள் , பத்மாவதி தாயார் மற்றும் வேணுகோபால் சன்னிதிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கபட்டது. மருத்துவம், தீயணைப்பு மற்றும் பல்வேறு அரசுத்துறையினர் பங்கேற்றனர். அதிகாலை முதல் இரவு வரை பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து நேர்த்திகடன் செலுத்தினர்.ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
விருதுநகர்: விருதுநகர் ராமர் கோயில் ஸ்ரீபத்மாவதி தயார் சமேத ஸ்ரீனிவாச சுவாமி சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. உற்சவர் ஸ்ரீபத்மாவதி தயார், சந்திரபிரபையுடன் காட்சி அளித்தார். இங்குள்ள ஆஞ்சநேயர் வெற்றிலை மாலை அலங்காரத்தில் காட்சி அளித்தார். திரளான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.