பதிவு செய்த நாள்
23
செப்
2018
11:09
அன்னுார்: கோவை அருகே பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம், வெங்கடேசப்பெருமாள் கோவிலில் நேற்று நடந்த புரட்டாசி திருவிழாவில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.கோவை மாவட்டம், அன்னுார் அருகே மொண்டிபாளையத்தில், வெங்கடேசப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், மேலைத்திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது. திருப்பதியைப் போல், இங்கும் ஏழு சிறிய குன்றுகளுக்கு அடுத்து, இக்கோவில் உள்ளது. இக்கோவிலில், புரட்டாசி திருவிழா பிரசித்தி பெற்றது. ஆறு சனிக்கிழமைகளில் புரட்டாசி திருவிழா நடக்கிறது. முதல் சனிக்கிழமை திருவிழா கடந்த, 15ல் நடந்தது. இரண்டாம் சனிக்கிழமை திருவிழா நேற்று நடந்தது. அதிகாலை, 4:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. இதில், வெங்கடேசப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலிருந்து, பல ஆயிரம் பக்தர்கள் அதிகாலை, 3:00 மணி முதல், வரிசையில் நின்று பெருமாளை தரிசித்தனர்.தாசர்களுக்கு அமைக்கப்பட்ட தனி அரங்கில், அரிசி, பருப்பு, தானியங்களை பக்தர்கள் படைத்தனர்.