1983ல் நடந்த சம்பவம் இது. ஜகத்குரு ஆதிசங்கரருக்கு அஞ்சல்தலை வெளியிட விரும்பினார் பிரதமர் இந்திரா. காஞ்சிப்பெரியவரின் கருத்தை அறிய மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியத்தை அனுப்பினார். மகாராஷ்டிராவிலுள்ள சதாராவில் சுவாமிகளை சந்தித்தார். “வெளியிடலாமா என்பது குறித்து மத்திய அரசு எனது கருத்து கேட்கிறதா அல்லது ஆசியைக் கோருகிறதா? முன்பே முடிவு ஆகிவிட்டால் நான் ஆட்சேபிக்கவில்லை” என்றார் காஞ்சிப்பெரியவர். “தங்களின் கருத்தை அறிந்த பின்னரே முடிவு செய்வோம்” என்றார் அமைச்சர். “நல்லது. அப்படியானால் சொல்கிறேன். அஞ்சல்தலை தேவையில்லை. அவதார புருஷரான ஆதிசங்கரர் பிறப்பிலேயே பெருமை மிக்கவர். பால்தலையில் அவரது படத்தை வெளியிட்டால் என்னவாகும்? நாக்கால் எச்சில்படுத்தி அஞ்சல்உறை மீது ஒட்டுவார்கள். நடைமுறையில் மக்கள் இப்படித்தான் செய்கிறார்கள். அது மரியாதையாகுமா?” எனக் கேட்டார். அதிர்ச்சியடைந்த அமைச்சர் “இந்தக் கோணத்தில் நாங்கள் யாரும் யோசிக்கவில்லை” என்றார். பெரியவரின் முடிவை பிரதமரும் உடனே ஏற்றுக் கொண்டார்.