மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவம்; யானைகள் மீது பன்னிரு திருமுறைகள் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11நவ 2025 10:11
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் மேளதாள வாத்தியங்கள் முழங்க யானைகள் மீது பன்னிரு திருமுறைகளை வைத்து வீதியுலா நடைபெற்றது. பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் கங்கை முதலான புண்ணிய நதிகள் புனித நீராடி சிவனை வழிபட்டு தங்கள் பாவ சுமைகளை போக்கிக் கொண்டதால் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் காவிரி துலா உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு காவிரி துலா உற்சவம் சிவாலயங்களில் கடந்த மாதம் 18ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த ஏழாம் தேதி பத்து நாள் உற்சவம் சிவாலயங்களில் கொடியேற்றத்துடன் துவங்கி தினந்தோறும் பஞ்ச மூர்த்திகள் தீர்த்தவாரி நடைபெற்று சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மாயூரநாதர், வதான்யேஸ்வரர் ஆலயங்களில் பன்னிரு திருமுறைகள் யானைகள் மீது வைத்து ஊர்வலம் நடத்தப்பட்டது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதான்யேஸ்வரர் ஆலயத்தில் நடராஜர் உற்சவர் சன்னதியில் திருமுறைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மூன்று யானைகள் மீது திருமுறைகள் வீதி உலா காட்சி நடைபெற்றது. தருமபுரம் வேத சிவாகம தேவார பாடசாலை மாணவர்கள் திருமுறை விண்ணப்பத்தை பாடியவாறு முன்னே செல்ல மேளதாள வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற வீதி உலாவில் பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர். இதில் திருக்கோயில் கட்டளை சிவகுருநாத தம்பிரான், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல் மாயூரநாதர் ஆலயத்தில் பன்னிரு திருமுறைகளுக்கு மாயூரநாதர் சன்னதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பன்னிரு திருமுறைகள் அபயாம்பிகை யானை மீது ஏற்றி தேரோடும் வீதிகளில் வீதி உலா சென்றது. சிவபுரம் வேதாகம பாடசாலை மாணவர்கள் ஓதுவாமூர்த்தி சிவகுமார் தலைமையில் திருமுறைகள் தேவாரப் பாடல்கள் பாடி வீதி உலா சென்ற போது பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.