பதிவு செய்த நாள்
11
நவ
2025
10:11
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு செல்லும் காட்டு பாதையை சீரமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இடுக்கி மாவட்டம் வண்டிபெரியாறு அருகில் உள்ள சத்திரம், புல்மேடு மற்றும் அழுதகடவு, முக்குழி ஆகிய பகுதிகள் வழியாக காட்டு பாதையில் நடந்து சபரிமலைக்கு செல்லாம். அவற்றில் சத்திரம், புல்மேடு காட்டு பாதையை பக்தர்கள் கூடுதலாக பயன்படுத்துவது வழக்கம். கடந்த மண்டல கால அளவில் 132500 பக்தர்கள் புல்மேடு வழியாக சென்றனர். அந்த பாதையை சீரமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமான ஈடுபட்டுள்ளனர். அப்பணிகள் பெரியாறு புலிகள் காப்பக மேற்கு பிரிவு துணை இயக்குனர் சந்தீப், அழுத வனத்துறை அதிகாரி பென்னிஐக்கரா ஆகியோர் தலைமையில் நடந்து வருகிறது. புல்மேட்டில் இருந்து சன்னிதானம் 12 கி.மீ., தொலைவில் உள்ளது. அந்த பாதையில் படர்ந்துள்ள செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டு வருகிறது.
ஏற்பாடு: புல்மேட்டில் கடந்த காலங்களை போன்று சிற்றுண்டி மையங்கள் அமைப்பதற்கு பணிகள் நடந்து வருகின்றன. புல்மேடு, சன்னிதானம் இடையே அரை கி.மீ., இடைவெளியில் குடிநீர் வசதி செய்யப்பட்டு, பக்தர்களுக்கு உதவும் வகையில் வனத்துறை ஊழியர்கள், சுற்றுச்சூழல் காவலர்கள் ஆகியோர் பணியமர்த்த பட உள்ளனர்.
சிரமம்: கடந்த மண்டல கால அளவில் புல்மேடு வழியாக சென்ற பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் சத்திரத்தில் தங்குவதற்கும், வாகனங்களை நிறுத்துவதற்கும், இயற்கை உபாதைகளை கழிக்கவும் போதிய வசதி இன்றி பக்தர்கள் கடுமையாக சிரமப்பட்டனர்.
வாய்ப்பு: இந்த முறையும் வண்டிபெரியாறு ஊராட்சி, தேவசம் போர்டு ஆகியோர் முறையாக எவ்வித ஏற்பாடுகளும் செய்யவில்லை. தேவசம் போர்டு சார்பில் ஐந்து கழிவறைகள் மட்டும் உள்ளன. அதனால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ளது.