பதிவு செய்த நாள்
06
பிப்
2012
11:02
திருநெல்வேலி:சுத்தமல்லி ஜெய்மாருதி கோயிலில் ராஜகோபுர அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று (6ம் தேதி) நடக்கிறது.சுத்தமல்லி விலக்கு கோபாலசமுத்திரம் ரோடு ஜெய்மாருதி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 27 நட்சத்திரத்தை குறிப்பிடும் வகையில் 27 அடி உயரத்திலும், 12 லக்னத்தை குறிப்பிடும் வகையில் 12 அடி அனுமன் சிலையும், 9 கோள்களை குறிக்கும் வகையில் 9 அனுமன் சிலைகளுடன் 3 நிலைகளை கொண்ட ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கோபுரத்தில் ராமபிரானின் பட்டாபிஷேக திருக்கோலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.ஸ்ரீ ராமஜெயம் பொறிக்கப்பட்டுள்ள செங்கற்களால் கோபுரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கோடி ராமஜெயம் எழுதப்பட்டு அவையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 4ம் தேதி தேவதா அனுக்கை, மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. கணபதிஹோமம், நவக்கிரஹ ஹோமம், நட்சத்திர ஹோமம், லக்ன பூஜை, அஷ்டதிக் பூஜை, பிரவேச பலி, சுதர்ஸன ஹோமம், புன்யாக வாஜனம், பஞ்சகவ்ய பூஜை, அஷ்டதிக் பூஜை, குருபீட பூஜை, பூர்ணாஹூதி, திவ்யபிரபந்தம், தேவார இசை, தீபாராதனை நடந்தது.5ம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்துவந்தது. நேற்று மாலையில் 2ம் கால யாகசாலை பூஜை, ராமர் சீதா திருக்கல்யாணம், ராமநாம பாராயணம், யந்திரஸ்தாபனம், அஷ்டபந்தனம், பிம்பசுத்தி, ரக்ஷாபந்தனம், மங்கள இசை நடந்தது.கும்பாபிஷேக விழாவான இன்று காலை 3ம் கால யாகசாலை பூஜை, வேதிகா பூஜை, நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, யாத்ரா தானம், கும்பம் எழுந்தருளல் நடக்கிறது.காலை 9.13 மணிக்கு மேல் 9.43 மணிக்குள் மீன லக்னத்தில் விமான கும்பாபிஷேகம், சுவாமி ஜெய்மாருதி, மகா கணபதி, தஜபுஜ காளி மற்றும் பரிவார தேவதைகளுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.கும்பாபிஷேகத்தை ஜெய்மாருதிதாசன் நாராயணன் குழுவினர் நடத்துகின்றனர். மதியம் மகேஸ்வர பூஜை, அன்னதானமும், பிரசன்ன பூஜை, தீபாராதனை நடக்கிறது.நேற்றைய யாகசாலை பூஜையில் நெல்லை எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன், மானூர் சேர்மன் கல்லூர் வேலாயுதம், மாநகராட்சி துணைமேயர் ஜெகநாதன், அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சுதா பரமசிவன், சுத்தமல்லி பஞ்., தலைவர் பிரம்மநாயகம், ஏ.எல்.என்.விஜயலெட்சுமி, தொழிலதிபர் சங்கர், ரமாசங்கர், நாராயணசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆலய ஸ்தாபகர் ஜெய்மாருதி தாசன், திருப்பணிக்குழு தலைவர் பாண்டியன் மற்றும் தர்ம சேவா டிரஸ்ட் பக்தர்கள் செய்துள்ளனர்.