பதிவு செய்த நாள்
01
அக்
2018
02:10
ஈரோடு: புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை ஒட்டி, பெருமாள் கோவில்களில், தரிசனம் செய்ய மக்கள் குவிந்தனர். புரட்டாசி மாத, இரண்டாவது சனிக்கிழமையான நேற்று (செப்.,29ல்), ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை நடை திறப்பு, திருப்பள்ளி எழுச்சி, திருமஞ்சனம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. மூலவர், ஆதிசேஷன் மீது, அனந்த சயன கோலத்திலும், உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, தங்க கவச அலங்காரத்திலும் அருள் பாலித்தனர்.யு.ஆர்.சி., பள்ளி ஆசிரியை குழுவினரின், நாராயண சங்கீத பஜனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அனைவருக்கும், பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது.
* பவானி, சங்கமேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள, ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் கோவில், ஊராட்சிக்கோட்டை பெருமாள் கோவில், மங்களகிரி பெருமாள் கோவில் களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அம்மாபேட்டை ஈஸ்வரன் கோவில் அருகிலுள்ள பெருமாள் கோவில், நெரிஞ்சிப்பேட்டை நிஷ்டையில் உறங்கும் பெருமாள் கோவில்களிலும், தரிசனத்துக்கு பக்தர்கள் குவிந்தனர்.
தாசர்களுக்கு விளைபொருள்: புன்செய்புளியம்பட்டி, கோவில்புதூரில், கரிவரதராஜ பெருமாள் கோவிலில், தங்க காப்பு அலங்காரத்தில், பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விவசாயிகள், தங்கள் விளை நிலங்களில் விளைந்த, அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை, தாசர்களுக்கு வழங்கி, சிறப்பு வழிபாடு நடத்தினர். ஈரோடு மட்டுமின்றி கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். புன்செய்புளியம்பட்டி, கீழ்முடுதுறை திம்மராயப்பெருமாள் கோவிலில், பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
* பவானிசாகரை அடுத்த, அண்ணா நகர், கதிர் பெருமாள் கோவிலில், பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கோவில் வளாகத்தில், 36 அடி ஆஞ்சநேயர், கருடாழ்வார் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
* மொடக்குறிச்சி, கஸ்பா பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில், புஷ்பங்கி அலங்காரத்தில் பெருமாள் காட்சி தந்தார். லட்சார்ச்சனை நிகழ்ச்சியும் நடந்தது. விரதமிருந்த பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
* அந்தியூர் பேட்டை பெருமாள் கோவில், கோட்டை பெருமாள் கோவில், வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் அத்தாணி, கைகாட்டி, மூங்கில்பட்டி, ஆப்பக்கூடல், வெள்ளித்திருப்பூர் பகுதி பெருமாள் கோவில்களில், இரண்டாவது சனிக்கிழமை வழிபாடு களை கட்டியது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை வழிபட்டனர்.