பதிவு செய்த நாள்
07
அக்
2018
12:10
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு நேற்று ஒன்றரை லட்சம் பேர் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு 10:30 மணிமுதல் பக்தர்கள் குவிந்திருந்தநிலையில் அதிகாலை ஒன்றரை மணிக்கு கோயில் நடைதிறக்கபட்டு, ஸ்ரீனிவாசபெருமாளுக்கு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜைகளை தேவராஜ்பட்டர் செய்தார். பின்னர் ராஜஅலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை, பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் தரிசனம் செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்த வந்திருந்த பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்தனர். ஏராளமான பக்தர்கள் மொட்டைபோட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். புயல் எச்சரிக்கை அறிவிக்கபட்டிருந்ததாலும், சதுரகிரி மற்றும் காட்டழகர் கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதி மறுக்கபட்டதால், திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம் காலை 8:00மணி முதல் அலைமோதியது. நேற்று மாலை 5 :00மணிவரை ஒன்றரை லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதியம் 3 :00 மணிக்கு கருடவாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்தார். ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் இளங்கோவன் மற்றும் கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்தனர். ஸ்ரீவி.டி.எஸ்.பி.ராஜா தலைமையில் 500க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.
விருதுநகர்: விருதுநகர் ராமர் கோயில் சன்னதியில் உள்ள சீனிவாச பெருமாள் முத்தங்கி அலங்காரத்தில் எழுந்தருளினார். குருவாயூரப்பன் அலங்காரத்தில் உற்சவரும், அனுமன் குபேரர் அலங்காரத்திலும்சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், ராமர்,சீதா,லட்சுமணன் சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானம் ரங்கநாதசுவாமி கோயிலில் சயனகோலத்திலும், சிறப்பு அலங்காரத்தில் உற்சவரும் பெருமாள் எழுந்தருளினர். விருதுநகர் தேசபந்து மைதானம் வாலசுப்பிரமணிய சுவாமி கோயில் பாலாஜி சன்னதியில் சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதுபோல் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், தீபாராதனைகள் நடந்தது.