பதிவு செய்த நாள்
09
அக்
2018
03:10
மயிலாடுதுறை:மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில், அந்திம புஷ்கரம் விழா தீர்த்தவாரி யுடன் நேற்று (அக்.,8ல்) துவங்கியது.குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெயர்ச்சியடைந்தார். அதையொட்டி, துலாம் ராசிக்கு உரிய நதியான காவிரியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நடந்த மகா புஷ்கரம் விழாவில், பல லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்.தற்போது, குரு பகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ந்ததை முன்னிட்டு, மயிலாடுதுறை காவிரி வடக்குகரையில் சிறப்பு ஹோமங்களுடன் அந்திம புஷ்கரம் விழா நேற்று (அக்.,8ல்) துவங்கியது.
மதியம் 12.00 மணியளவில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதானேஸ்வரர் சுவாமி கோயிலில் இருந்து அஸ்திரதேவர் காவிரி துலாக்கட்டத்திற்கு எழுந்தருளினார்.தருமபுரம் ஆதீனம் இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள், திருவாவடு துறை ஆதீனம் கட்டளை விசாரணை அம்பலவாண தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் அஸ்திர தேவருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, சுவாமி தீர்த்தம் கொடுக்க, திரளான பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர். விழாவில், தமிழக அமைச்சர் ஓ.எஸ்.மணியன், எம்.எல்.ஏ., ராதாகிருஷ்ணன் ஆகியோர் சங்கல்பம் செய்து வழிபாடு நடத்தினர்.புஷ்கர கமிட்டி ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி, சிவபுரம் வேத சிவாகம பாடசாலை நிறுவனர் சாமிநாத சிவாச்சாரியார் மற்றும் புஷ்கரம் கமிட்டி பொறுப்பாளர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அந்திம புஷ்கரம் விழா, வரும் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.