பதிவு செய்த நாள்
09
அக்
2018
03:10
புதுச்சேரி:மகா புஷ்கரம் விழாவிற்காக, புதுச்சேரியில் இருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு பஸ், ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க., கோரிக்கை விடுத்துள்ளது.
வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை;144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் மகா புஷ்கரம் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில், வரும் 12ம் தேதி காலை முதல், தொடங்குகிறது.
தாமிரபரணி நதியில் நீராடி வழிபாடு செய்தால் இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மகாபுஷ்கரம் வரும் 23ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இந்த விழாவில், பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தாமிர பரணிக்கு வருவர். தமிழக தென் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் புதுச்சேரி யில் வசித்து வருகின்றனர். இவர்கள், மகா புஷ்கரத்தில் பங்கேற்பதற்கு வசதிக்காக, புதுச்சேரி அரசு சிறப்பு பஸ்களை, புதுச்சேரியில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மகாபுஷ்கரம் நடைபெறும் 12 நாட்களும் புதுச்சேரியில் இருந்து சிறப்பு பஸ், ரயில் இயக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.