பதிவு செய்த நாள்
07
பிப்
2012
03:02
கடையநல்லூர் :"திருமலைக்குமரனுக்கு அரோகரா, வேலாயுதருக்கு அரோகரா என்ற பக்தி கோஷங்கள் முழங்கிட பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. அருணகிரிநாதரால் பாடல் பெற்று புகழ்பெற்று விளங்க கூடிய பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோயில் பக்தர்களால் முருக கடவுளின் 7ம் படைவீடாக கருதப்பட்டு வருகிறது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 29ம் தேதி அன்னக்கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. ஒவ்வொரு நாளும் மண்டகப்படிதாரர்களின் சார்பில் சிறப்பு பூஜை, குமரன் வீதியுலா நடந்து வருகிறது. தைப்பூச திருவிழாவில் சிறப்பு பெற்ற திருத்தேரோட்டம் நேற்று காலை நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று திருத்தேரில் பூஜைகள் நடத்தப்பட்டு ரதவீதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது. "திருமலைக்குமரனுக்கு அரோகரா, வேலாயுதருக்கு அரோகரா என்ற பக்த கோஷங்கள் எழுப்பபட்ட வண்ணம் இருந்தன. தேரோட்டத்தில் கோயில் உதவி ஆணையர் ரோசாலி சுமதா, பண்பொழி டவுன் பஞ்.,தலைவர் சங்கரசுப்பிரமணியன், முன்னாள் திருப்பணிக்குழு தலைவர் அருணாசலம், பண்பொழி அதிமுக செயலாளர் பரமசிவன், கவுன்சிலர்கள் முருகன், அழகுதுரை, முன்னாள் கவுன்சிலர் முருகையா, ராசாபாண்டியன் மற்றும் கோயில் பணியாளர்கள், மண்டகப்படிதாரர்கள், பண்பொழி, கரிசல்குடியிருப்பு, வடகரை, நெடுவயல், அச்சன்புதூர், மேக்கரை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.