பதிவு செய்த நாள்
07
பிப்
2012
03:02
அவிநாசி :செங்கப்பள்ளி அருகே பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. ஊத்துக்குளி ஒன்றியம், செங்காளிபாளையம் - சாமியார்பாளையத்தில் தோடை குல கொங்கு வேளாளர், கன்னடிய செங்காளி குலவண்ணார்கள் ஆகியோரின் குலதெய்வமாகிய பெரியநாயகி அம்மன் கோவில் பழுதடைந்த காரணத்தால், திருப்பணி செய்யப்பட்டது. பணி நிறைவுற்று கும்பாபிஷேக விழா, கடந்த 3ம் தேதி துவங்கியது. கோவில் அருகே அமைக்கப்பட்ட யாகசாலையில், நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை 8.30 மணிக்கு நிறைவு கால யாக பூஜைக்கு பின், பூஜிக்கப்பட்ட கலசங்களை சிவாச்சார்யார்கள், பிரகார உலாவாக எடுத்துச் சென்றனர். தொடர்ந்து நடந்த பூஜைக்கு பின், காலை 9.35 மணிக்கு பெரியநாயகி அம்மன், மகா கணபதி, முருகன், கருப்பண்ணசாமி, செங்காளியம்மன், முனீஸ்வரர் ஆகிய மூலவ விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. மூலவர்களுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனை நடந்தது. நேற்று காலை 7.00 மணி முதலே பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கொடுமுடி தண்டபாணி குருக்கள் தலைமையில், பூஜைகள் நடந்தன. திருப்பணி குழு தலைவர் சாமிநாதன், துணை தலைவர்கள் சுப்ரமணியம், சின்னசாமி, செயலாளர் துரைசாமி, இணை செயலாளர் குமாரசாமி, உதவி செயலாளர்கள் முத்துசாமி, கோதண்டபாணி, பொருளாளர் முத்துசாமி மற்றும் திருப்பணி குழுவினர், தோடை குல கொங்கு வேளாளர்கள் குழுவினர் உட்பட பலர் பங்கேற்றனர்.