பதிவு செய்த நாள்
07
பிப்
2012
03:02
கடையநல்லூர் :"ஓம் சக்தி, பராசக்தி கோஷங்கள் முழங்கிட திரிகூடபுரம் மகா உச்சிமகா காளியம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. கடையநல்லூர் அருகேயுள்ள திரிகூடபுரத்தில் பிரசித்தி பெற்று விளங்கும் மகா உச்சிமகா காளியம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கடந்த 4ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜைகளும், 5ம் தேதி காலை 2ம் கால யாகசாலை பூஜையும், மாலை 3ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், மகா பூர்ணாகுதி, தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து யாக சாலையிலிருந்து கடம்புறப்பாடு நடந்தது. காலை 9.10 மணிக்கு விமான அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும், 11 மணிக்கு மகா அபிஷேகமும் நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும், மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜையும், இரவு 7 மணிக்கு அம்மன் சப்பர பவனி வருதலும் நடந்தது. கும்பாபிஷேகத்தை சென்னை பிரதியங்கிராதேவி உபாசகர் சாத்தஸ்ரீ சிதம்பரேஸ்வரர் சுவாமிகள், கிருஷ்ணாபுரம் சக்திகணேஷ் சுவாமிகள், சிவாச்சாரிய பெருமக்கள் நடத்தி வைத்தனர். விழாவில் முன்னாள் பஞ்., தலைவரும், கோயில் தலைவருமான உடையார் சாமி, பரம்பரை நாட்டாண்மை அரிகரன் (எ) பொன்னுச்சாமி, திரிகூடபுரம் பஞ்.,தலைவர் பூங்கொடி, முன்னாள் பஞ்.,தலைவர் முருகேசன், மாவட்ட கவுன்சிலர் மாரியம்மாள், ஒன்றிய கவுன்சிலர் பெரியதாய், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரவணக்குமார், அரசு ஒப்பந்தக்காரர் பாண்டியசுப்பிரமணியன், பொதுப்பணித்துறை (ஓய்வு) அருணாசலதேவர், பிவிடி பிரிக்ஸ் பூசைத்துரை, சொக்கம்பட்டி பஞ்.,தலைவர் பூபதிசந்தனபாண்டியன், சொக்கம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் முத்துலட்சுமி மற்றும் திரிகூடபுரம், சொக்கம்பட்டி, புளியங்குடி, சுரண்டை, நெல்லை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.