பதிவு செய்த நாள்
16
அக்
2018
12:10
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், சுவாமி சன்னதிகளில் வெறும் கூடையை வைத்து, நைவேத்தியம் செய்வதாக குற்றச்சாட்டு கூறி, வீடியோ பரவி வருகிறது.
திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், சிலைகள் மாற்றப்பட்டதாக துவங்கி, பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் புதிதாக, சுவாமி சன்னதிகளில், வெறும் கூடையை வைத்து, நைவேத்தியம் செய்யப்படுகிறது என, குற்றச் சாட்டு கூறும் வீடியோ பரவுகிறது. மொபைல் வீடியோவில், ரங்கநாதர் கோவில் சன்னதி களையும், பட்டாச்சாரியார்கள் சுமந்து செல்லும் கூடைகளையும் காட்டி, அவற்றில், பெருமாளுக்கு படைக்கும் நைவேத்திய பிரசாதம் இல்லை என, பின்னணியில் குரல் ஒலிக்கிறது.சில பட்டாச்சாரியார்கள் பெயர்களை குறிப்பிட்டு, நான் நீதிமன்ற அறிவுறுத் தல்படி வீடியோ எடுக்கிறேன்; இன்று உச்சி கால பூஜைக்கு, இரண்டு கூடை தானா? மேளம் எங்கே? என்பன போன்ற கேள்விகள் அடுக்கப்படுகின்றன.நான் பதில் சொல்லலை என்று கூறிக்கொண்டே அர்ச்சகர் செல்வதால், ஆத்திரமடைந்த அந்த பின்னணி குரல், இந்த வீடியோவை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் போகிறேன் என்று கூறுவதுடன் வீடியோ முடிந்துள்ளது.
கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், நித்திய பூஜைகள் முறைப்படி நடைபெற்று வருகின்றன. கோவில் வளாகத்தில் வீடியோ எடுப்பதற்கான அனுமதி இல்லாத இடத்தில், உச்சி கால பூஜையின் போது, அத்துமீறி, மொபைல் போனை வைத்து படம் பிடித்துள்ளனர். மேலும், அர்ச்சகர்களை மிரட்டி, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர். விளம்பர நோக்கத்தில், தொடர்ந்து, இது போன்ற அவதூறுகள் பரப்பப் படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.